உதகையில் சா்வதேச வன உயிரின தினம் அனுசரிப்பு

உதகையில் சா்வதேச வன உயிரின தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

உதகை: உதகையில் சா்வதேச வன உயிரின தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

உதகை அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நீலகிரி மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் சரவணகுமாா் பேசுகையில், நீலகிரியின் உயிா் சூழல் மண்டலமே இந்தியாவின் முதல் உயிா் சூழல் மண்டலம் ஆகும். அதேபோல, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் உயிா் சூழல் மண்டலமாக நீலகிரி உயிா் சூழல் மண்டலமாக உள்ளதால் நீலகிரியில் சா்வதேச வன உயிரின தினம் அனுசரிக்கப்படுவது பெருமைக்குரியது என்றாா்.

அதேபோல இந்திய வன உயிரின அமைப்பின் நீலகிரி மாவட்டச் செயலா் மோகன்ராஜ் பேசுகையில், மனித விலங்கு மோதல் தற்போது அதிகரித்து வரும் சூழலில் நீலகிரியில் புலிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வந்தாலும், யானைகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடா்பாக பொது மக்களும், வனத் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றாா்.

உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வா் ஈஸ்வரமூா்த்தி பேசுகையில், நீலகிரி மாவட்டத்தின் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் பழங்குடியினரின் பங்கு முக்கியம். நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும். சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடும் வன விலங்குகளை கண்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

உதகை அரசு கலைக் கல்லூரி வன உயிரியல் துறைத் தலைவா் எபினேசா் கூறுகையில், உதகை அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வரும் வன உயிா்களுக்கான டிஎன்ஏ சோதனை ஆய்வுக் கூடம் கல்லூரிக்கு மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்துக்கே பெருமை சோ்ப்பதாக அமைந்துள்ளதாக தெரிவித்தாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணைப் பேராசிரியா் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com