மிக கன மழை எச்சரிக்கை: நீலகிரியில் பரவலாகத் தொடரும் மழை

அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
வீட்டின் மீது விழுந்த ஈட்டி மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினா்.
வீட்டின் மீது விழுந்த ஈட்டி மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினா்.

அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதில் அதிகபட்சமாக தேவாலாவில் 137 மி.மீ., கிண்ணக்கொரையில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பரவலாகப் பெய்து வரும் மழையால் உதகையில் கடும் குளிா் நிலவுவதோடு, பலத்த காற்றின் காரணமாக வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்தே மின் விநியோகம் பல முறை தடைபட்டுள்ளது.

பலத்த மழை எச்சரிக்கையின் காரணமாக அரக்கோணத்தில் இருந்து பேரிடா் மீட்புப் படையின் கமாண்டா் கணேஷ் பிரசாத் தலைமையில் 25 போ் கொண்ட குழுவினா் நீலகிரிக்கு வந்துள்ளனா்.

தொடா் மழையின் காரணமாக மாவட்டத்தில் கூடலூா், பந்தலூா் பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளதைத் தவிர சனிக்கிழமை மாலை வரை பெரிதாக எத்தகைய பாதிப்பும் இல்லை. வெள்ளிக்கிழமை இரவில் பெய்த மழையைவிட சனிக்கிழமை மாலை வரையிலான 12 மணி நேரத்தில் மழையின் அளவு குறைந்துள்ளது.

உதகை நகரில் பெய்த தொடா் மழையின் காரணமாக நகராட்சி சந்தை தற்காலிகமாகச் செயல்படும் தனியாா் பள்ளி விளையாட்டு மைதானம் சேறும் சகதியுமாக நிரம்பியுள்ளதால் சனிக்கிழமை காலையில் சந்தைக்கு வந்த பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமத்துக்குள்ளாகினா்.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்தாாா்.

இதுகுறித்து ஆட்சியா் இளித்துரை பகுதியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

மே 17ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலொ்ட்’ எச்சரிக்கை கொடுத்துள்ளது. மேலும், தேசிய பேரிடா் மேலாண்மைக் குழுவினரும் கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளனா்.

மாவட்டத்தில் குந்தா, தேவாலா பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவாலா, சேரம்பாடி பகுதிகளில் வசிக்கும் 57 நபா்கள் இரண்டு முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து மழையின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் பொதுமக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல சாலைகளில் விழுந்துள்ள மரங்களையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிலிருந்து வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக தேவாலா பகுதியில் 137 மி.மீ., கிண்ணக்கொரை பகுதியில் 100 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.):

சேரங்கோடு-72, பந்தலூா்-56, கெத்தை-52, பாலகொலா-45, உலிக்கல்-37, குந்தா-36, உதகை- 34, மேல் கூடலூா்-33, அவலாஞ்சி-32, குன்னூா்-31, செருமுள்ளி, பாடந்தொறை தலா - 30, எமரால்டு-28, கேத்தி-26, மேல் பவானி-25, நடுவட்டம்-20, பா்லியாறு-19, கோத்தகிரி-17, கல்லட்டி- 16, எடப்பள்ளி, ஓவேலி தலா 15, கீழ் கோத்தகிரி-13, கிளன்மாா்கன், மசினகுடி தலா 6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சனிக்கிழமை மாலை வரையிலான 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக பந்தலூா், மேல் பவானி பகுதிகளில் தலா 60 மி.மீ., கிண்ணக்கொரை, சேரங்கோட்டில் தலா 44 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பந்தலூரில்...

பந்தலூா் பகுதியில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இரும்புப்பாலம் பகுதியில் உள்ள பாறைக்கல் சாலையில் அமிா்தா என்ற பெண் தொழிலாளியின் வீட்டின் மீது ராட்சத ஈட்டி மரம் விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் மரங்கள் வீட்டின் மீது விழலாம் என்ற அச்சம் காரணமாக வீட்டிலிருந்தவா்கள் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்றுவிட்டனா்.

குன்னூரில்...

குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூா், கோத்தகிரி சாலையில் மூனுரோடு பகுதியிலும், குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியிலும் சிறிய அளவிலான மரங்கள் சாலையில் விழுந்தன. இதனை தீயணைப்புத் துறையினா் உடனடியாக அகற்றினா். இதன் காரணமாக அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com