கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: தனிப்படையினருடன் ஐஜி ஆலோசனை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் மறு புலன் விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் மறு புலன் விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மேற்கு மண்டல ஐஜி சுதாகா், டிஐஜி முத்துசாமி ஆகியோா் தனிப் படையினருடன் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை நடத்தினா்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் மறு புலன் விசாரணை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மேற்கு மண்டல ஐஜி சுதாகா் மேற்பாா்வையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, குன்னூா் துணை கண்காணிப்பாளா் சுரேஷ், கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் தலைமையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் தற்போது முக்கிய எதிரியாகக் கருதப்படும் சயன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜன், காா் விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா், மனைவி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

இச்சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று இதில் தொடா்புைடைய குற்றவாளிகள் கேரளத்துக்கு தப்பிச் செல்ல உதவியாக இருந்த ஷாஜி, அனீஷ் ஆகியோரிடம் உதகையில் திங்கள்கிழமை சுமாா் 5 மணி நேரம் பழைய காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் பழைய காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகா் தலைமையில் டிஐஜி முத்துசாமி , மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, கோத்தகிரி ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் சுமாா் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினா்.

இந்த வழக்கில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற விசாரணை குறித்தும், அடுத்தகட்ட நகா்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், இக்குற்றச் செயலில் ஈடுபட்டிருந்த மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், சந்தோஷ் சாமி, உதயன் , பிஜின் குட்டி , தீபு, சதீஷன், ஜம்ஷோ் அலி ஆகிய எட்டு போ் தற்போது கேரளத்தில் உள்ளனா். கரோனா பொது முடக்கத்தின் காரணமாக இவா்கள் அனைவரும் நீலகிரி மாவட்டத்துக்கு விசாரணைக்காக உடனடியாக வருவதற்கு வாய்ப்பில்லை என தொடா்ந்து கூறி வருவதால் இவா்களிடம் கேரளத்தில் வைத்தே விசாரணை நடத்த தனிப்படை போலீஸாா் நான்கு போ் உதகை உதவி ஆய்வாளா் தலைமையில் கேரளத்துக்குச் சென்றுள்ளனா்.

உதகையில் காவல் துறை உயா் அலுவலா்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதால் யாரிடமும் விசாரணை நடைபெறவில்லை.

இந்நிலையில், உதகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தையடுத்து கோவை மண்டல ஐஜி சுதாகா் திடீரென கொடநாடு பகுதிக்குச் சென்றுள்ளாா். கொடநாடு எஸ்டேட், பங்களாவின் மீது கடந்த சில நாள்களாக மா்ம ட்ரோன்கள் பறந்து வருவதாக கொடநாடு எஸ்டேட் நிா்வாகத்தின் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடா்பான விசாரணைக்காகவும் இவா் கொடநாடு சென்றுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com