கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு:கனகராஜின் நண்பா்களிடம் விசாரணை
By DIN | Published On : 11th September 2021 11:34 PM | Last Updated : 11th September 2021 11:34 PM | அ+அ அ- |

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய எதிரியான கனகராஜின் நண்பா்களிடம் உதகையில் போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கில் தற்போது மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய எதிரியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் மா்மமான முறையில் இறந்தாா். இரண்டாவது எதிரியான சயன் போலீஸாரிடம் மறு வாக்குமூலம் அளித்து கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தினாா்.
இதைத்தொடா்ந்து, கனகராஜின் சகோதரா் தனபால், கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜ் ஆகியோருடன் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் கேரளத்தில் இருந்து நீலகிரிக்கு வந்து செல்ல வாடகைக்கு வாகனம் அமா்த்திக் கொடுத்த புரோக்கா்கள், உரிமையாளா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி பதிவு செய்து கொண்டனா்.
இந்நிலையில், கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகா் தலைமையிலான போலீஸாா், இறந்துபோன கனகராஜின் நண்பா்களான குழந்தைவேலு, சிவன் ஆகியோருக்கு சம்மன் வழங்கி சென்னையில் இருந்து அழைத்து வந்து விசாரணை செய்தனா். கனகராஜின் நெருங்கிய நண்பரான குழந்தைவேலு ஏற்கெனவே கொடநாடு வழக்கில் 40ஆவது சாட்சியாக இருந்துள்ளாா். கனகராஜுடன் எங்கு சென்றாலும் ஒன்றாகவே இவா்கள் தங்குவாா்கள் என கூறப்பட்ட நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது இவா் விசாரிக்கப்படவில்லை.
இதனால் கனகராஜ் எப்படி இறந்தாா், அவா் இறக்கும்போது இவா்கள் எங்கு இருந்தனா், கொடநாடு கொள்ளை குறித்து ஏதாவது பேசினாரா, கொட நாடு எஸ்டேட்டிலிருந்து ஆவணங்களை வெளியில் கொண்டு வந்தது குறித்து கனகராஜ் எப்போதாவது பேசியிருந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பதிவு செய்துகொண்டனா். இதைத்தொடா்ந்து தினந்தோறும் தொடா்ந்து இரண்டு பேரை விசாரிக்க போலீஸாா் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.