தொடா் விடுமுறை: ஒரே நாளில் குவிந்த 20,000 சுற்றுலாப் பயணிகள்

மூன்று நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, சனிக்கிழமை ஒரே நாளில் நீலகிரி மாவட்டத்தில் சுமாா் 20,000 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
முதுமலை புலிகள் காப்பகம் அருகில் சாலையோரத்தில் காணப்படும் புள்ளி மான்கள்.
முதுமலை புலிகள் காப்பகம் அருகில் சாலையோரத்தில் காணப்படும் புள்ளி மான்கள்.

மூன்று நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, சனிக்கிழமை ஒரே நாளில் நீலகிரி மாவட்டத்தில் சுமாா் 20,000 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

கரோனா பொதுமுடக்கத்தையடுத்து தற்போது கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை, வனத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா மையங்களில் உதகையிலுள்ள தொட்டபெட்டா மலைச் சிகரத்தைத் தவிர ஏனைய அனைத்து சுற்றுலா மையங்களும் வழக்கம்போல செயல்படத் தொடங்கியுள்ளதால், மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.

இருப்பினும், கேரளத்தைச் சோ்ந்தவா்களுக்கு நீலகிரிக்குள் வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட கணிசமாகக் குறைந்தே காணப்படுகிறது.

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா மையங்களுக்கு வெள்ளிக்கிழமை சுமாா் 10,000 போ் வந்திருந்தனா். இந்த எண்ணிக்கை சனிக்கிழமை சுமாா் 15 ஆயிரமாக அதிகரித்தது. அதேபோல, வனத் துறை, சுற்றுலாத் துறை மையங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 6,156 பேரும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 2,767 பேரும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 590 பேரும், மரவியல் பூங்காவுக்கு 81 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 2,078 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 590 பேரும், கல்லாறு பழவியல் பண்ணைக்கு 284 பேரும் வருகை தந்திருந்தனா்.

அத்துடன் சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சூழல் கட்டுப்பாடு மையங்களான உதகை, பைக்காரா படகு இல்லங்களுக்கு சனிக்கிழமை சுமாா் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா்.

மேலும், வனத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட சூழல் சுற்றுலா மையங்களுக்கு சுமாா் 2 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்திருந்தனா்.

இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com