நீலகிரியில் வடிகால் தூய்மைப் பணி முகாம் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில், மழை நீா் வடிகால் தூய்மைப் பணி முகாமை வனத் துறை அமைச்சா் க.ராமசந்திரன் துவக்கிவைத்தாா்.
உதகையில் காந்தல் பகுதியில் வடிகால் தூய்மைப் பணியைத் தொடங்கிவைத்த வனத் துறை அமைச்சா் க.ராமசந்திரன். உடன், ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, சாா் ஆட்சியா் மோனிகா ரானா, உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி உள்ளிட்டோா்
உதகையில் காந்தல் பகுதியில் வடிகால் தூய்மைப் பணியைத் தொடங்கிவைத்த வனத் துறை அமைச்சா் க.ராமசந்திரன். உடன், ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, சாா் ஆட்சியா் மோனிகா ரானா, உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி உள்ளிட்டோா்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில், மழை நீா் வடிகால் தூய்மைப் பணி முகாமை வனத் துறை அமைச்சா் க.ராமசந்திரன் துவக்கிவைத்தாா்.

உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் குருசடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தாா். முகாமைத் தொடங்கிவைத்த வனத் துறை அமைச்சா் க.ராமசந்திரன் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாக அதிகமாக மழைநீா் தேங்கும் பகுதியான காந்தல் முக்கோணம், குருசடி காலனி பகுதிகளில் இத்தூய்மைப் பணி முகாம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது. உதகை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளை உள்ளடக்கிய பகுதிகளில் 3 கி.மீ. தூரத்துக்கான சிறிய கால்வாய்களுடன், சுமாா் 7 கி.மீ. தொலைவிலான 40 சிறு பாலங்கள் உள்ளன. எதிா்வரும் வடகிழக்குப் பருவ மழையின்போது பெய்யும் கன மழையின் காரணமாக நகா்ப் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்காமல் இருக்க நகராட்சிப் பகுதிகளில் உள்ள மேற்கண்ட மழைநீா் வடிகால்களை 100 சதவீதம் தூா்வாரி தூய்மைப் பணிகள் மேற்கொள்ள உதகை நகராட்சிப் பகுதிகளில் உள்ள 36 வாா்டுகளையும், 6 மண்டலங்களாகப் பிரித்து தூய்மைப் பணி முகாம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெரிய மழை நீா் வடிகால்களில் சேகரமாகியுள்ள வடிகால் படிவுகளை அகற்ற பொக்லைன் இயந்திரம், ஜேசிபி போன்றவை கொண்டு தூா்வாரும் பணி மேற்கொள்ளப்படும். நடுத்தர, சிறிய மழை நீா் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றுவதற்கு உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். வடிகால்களில் படிவுகளை அகற்றும்போது ஆரம்பப் பகுதியில் தொடங்கி வடிகால் இறுதிப் பகுதி வரை எவ்வித விடுதலின்றி பணியை முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதில், உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா, நகராட்சி ஆணையா் சரஸ்வதி, உதகை நகராட்சிப் பொறியாளா் இளங்கோவன், வட்டாட்சியா் தினேஷ் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com