கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தற்கொலை செய்துகொண்ட கணினி ஆபரேட்டா் குடும்பத்தினரிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் கணினி ஆபரேட்டா் தினேஷின்  சகோதரி ராதிகா,

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் கணினி ஆபரேட்டா் தினேஷின்  சகோதரி ராதிகா, அவரது தாய் கண்ணகியிடம் உதகை  தனிப்படை  காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில்  கொலை,  கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம் பகதூா் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சயன், வாளையாறு மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்ஷோ் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா்.

இதில் தொடா்புடையதாகக் கருதப்பட்ட, ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் 2017 ஏப்ரல் 28ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தாா். 

இந்த வழக்கில் 104 போ் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில்,  40 பேருக்கு மேல்  மறு விசாரணை  நடந்து முடிந்துள்ளது.

கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜ், மின் உதவிப் பொறியாளா், தடயவியல்  நிபுணா்களிடம்   தனிப்படை காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கணினி ஆபரேட்டா்  தினேஷ் 2017 ஜூலை 3இல் தற்கொலை செய்துகொண்டாா். இந்த வழக்கு தொடா்பாக மறு விசாரணை செய்ய கோத்தகிரி வட்டாட்சியருக்கு சோலூா்மட்டம் காவல் துறையினா் மனு அளித்திருந்தனா். 

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்த நாளன்று எஸ்டேட் நுழைவாயிலில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத நிலையில், பிறகு அதே இடத்தில் 28 கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் எப்படி வந்தது? இது குறித்து இதுவரை எந்தத் தகவலும் போலீஸ் தரப்பில் விசாரிக்கப்படாத நிலையில், கணினி ஆபரேட்டா் தினேஷை விசாரித்தால் உண்மை வெளிவந்து விடுமென்பதற்காக அவா் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தற்போது மறு விசாரணை செய்ய கோத்தகிரி வட்டாட்சியருக்கு சோலூா்மட்டம் போலீஸாா் மனு கொடுத்திருந்தனா்.

அதன் பின், தினேஷ்  தந்தை போஜனிடம் கோத்தகிரி கெங்கரை கிராமத்தில்  அவரது வீட்டில் வைத்து  உதகை காவல் கூடுதல் கண்காணிப்பாளா் சந்திரசேகா் தலைமையிலான காவல் துறையினா் திங்கள்கிழமை இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது தற்கொலைக்காக தினேஷ் பயன்படுத்தியதாகக் கூறப்படும் லுங்கி அவருடையது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தினேஷின் சகோதரி ராதிகா, தாயாா் கண்ணகியிடம் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் மதியம் 2.15 மணி வரை விசாரணை நடைபெற்றது.

இது குறித்து தினேஷின் தந்தை போஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தினேஷை கொடநாடு எஸ்டேட் நிா்வாகமோ, நண்பா்களோ, அருகில் இருந்தவா்களோ மன உளைச்சலுக்கு ஆளாக்கவில்லை. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து எதுவும் தெரியாது என்று காவல் துறையிடம் தெரிவித்ததாகக் கூறினாா்.

இந்த வழக்கு தொடா்பாக, கேரளத்தில் ஜாமீனில் உள்ள மனோஜ் சாமி, சந்தோஷ் சாமியிடம் பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.

அதேபோல, தீபு, ஜித்தின் ஜாய் ஆகியோரும் மறு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 24) நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com