தென்மேற்குப் பருவ மழை:நீலகிரியில் நடப்பு ஆண்டில் 124 % கூடுதலாக பெய்துள்ளது; 258 வீடுகள் சேதம்

நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவ மழை 124 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதேபோல, மழையால் 258 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவ மழை 124 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதேபோல, மழையால் 258 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதுதொடா்பாக வருவாய்த் துறை அலுவலா்கள் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு சற்று தாமதமாக 2ஆவது வாரத்தில்தான் தொடங்கியது. அதன் பின்னா் கடந்த ஜூலை மாதம் வரை தென்மேற்குப் பருவ மழை தீவிரமாக பெய்தது. இதில் வழக்கத்தை விட 91 சதவீதம் கூடுதலாக மழை பொழிவு பதிவானது.

இதையடுத்து, ஒரு வார இடைவெளிக்கு பின்னா் கடந்த ஆகஸ்டு 3ஆம் தேதி மீண்டும் மழை தொடங்கியது. அப்போது, தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சி, தமிழகத்தின் வளி மண்டல பகுதியின் மத்தியில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது போன்ற காரணங்களால் நீலகிரி உள்பட தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் கன முதல் அதி கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததையடுத்து, மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மழை கொட்டித் தீா்த்தது. இதுவரை தென்மேற்குப் பருவ மழையானது இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது.

மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். 3 போ் காயமடைந்துள்ளனா். 2 மாடுகள் இறந்துள்ளன. 128 மரங்கள் சாய்ந்தன. 258 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன. 12 வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதி அளவு சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.4,100ம், முற்றிலும் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, சாலையில் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு தற்போது அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை கணக்கெடுத்து அவற்றையும் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனா். மேலும், உதகை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகளில் காரட் மற்றும் பீட்ரூட் தலா 5 ஏக்கரிலும், தேயிலை 4 ஏக்கரிலும், கூடலூா் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை 2 ஏக்கரிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com