கொடநாடு எஸ்டேட் வழக்கு: கேரளம், கா்நாடக மாநிலங்களில் விசாரணை நடத்த முடிவு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூா் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக கோத்தகிரி போலீஸாா் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமாா், ஜிதின் ஜாய், ஜம்சீா் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னா், கொடநாடு வழக்கின் விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பாா்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை உதகையில் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் சயான், வாளையாறு மனோஜ் , சதீசன், உதயகுமாா், மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, ஜம்சீா் அலி, ஜிதின் ஜாய் ஆகியோா் நேரில் ஆஜராகினா். தீபு மட்டும் ஆஜராகவில்லை.

இவ்வழக்கு விசாரணையின்போது நிபந்தனை ஜாமீனில் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வரும் வாளையாறு மனோஜ், தனபால், ரமேஷ் ஆகியோா் தங்களது நிபந்தனை ஜாமீனை தளா்த்தக் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல தனிப்படை போலீஸாா் இதுவரை 257 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில் கேரளத்துக்கு சென்று சயானின் வாகன விபத்து குறித்து மேலும் விசாரிக்க வேண்டி உள்ளதாகவும், கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது கா்நாடக மாநிலத்துக்கு தகவல் பரிமாற்றம் நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளதால், அது குறித்தும் விசாரிக்க இருப்பதாகவும் அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞா்களான ஷாஜகான், கனகராஜ் ஆகியோா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com