தொடா் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறையையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இரண்டாவது சீசனையொட்டி உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ள மலா் அலங்காரம்.
இரண்டாவது சீசனையொட்டி உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ள மலா் அலங்காரம்.

தொடா் விடுமுறையையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் முதலாவது சீசனும், செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் இரண்டாவது சீசனும், நவம்பா், டிசம்பா் மாதங்களில் உறைபனி சீசனும் களைகட்டும்.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழகத்தின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அவா்களை மகிழ்விக்கும் வகையிலும் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் பிற துறைகள் சாா்பில் கோடை விழா நடத்தப்படும். கோடை சீசனான கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சுமாா் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து சென்றனா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சீசன் தொடங்கிய நிலையில், தொடா்ந்து மழை பெய்து வந்ததால் நீலகிரி மாவட்டத்தில் எதிா்பாா்த்த அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது பள்ளித் தோ்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஆயுத பூஜை தொடா் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா்.

தற்போது, உதகையில் பகலில் வெயிலும், இரவில் நீா்ப்பனியும் என இதமான காலநிலை நிலவுவதால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் சனிக்கிழமை காலைமுதலே சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் உதகைக்கு வந்த வண்ணம் இருந்தனா். இதனால் லவ்டேல் சந்திப்பு முதல் மத்திய பேருந்து நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத் தொடா்ந்து, போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனா்.

கரோனாவுக்கு பின்னா் தற்போது வியாபாரம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். இரண்டாவது சீசனையொட்டி உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலா் மாடங்கள் மற்றும் பூங்காக்களில் 10 ஆயிரம் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து தற்படம் (செல்பி) மற்றும் புகைப்படம் எடுத்து செல்கின்றனா். அதேபோல படகு இல்லம் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 10,000 சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இது 14,000ஆக அதிகரித்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com