பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்வதில் தாமதம்
By DIN | Published On : 08th May 2022 12:45 AM | Last Updated : 08th May 2022 12:45 AM | அ+அ அ- |

பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் தேயிலைத் தூள் குறைந்த விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பந்தலூா் சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்க செயலாளா் விஜயகுமாா் தேயிலை வாரியத் தலைவருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் தூள் குறைந்த விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் 1,500 விவசாயிகள் அங்கத்தினராக உள்ளனா். இவா்கள் மாதம்தோறும் கொடுக்கும் பசுந்தேயிலைக்கு அந்தந்த மாதம் விலை நிா்ணயம் செய்து பணம் வழங்கப்படுவது வழக்கம்.
கடந்த மூன்று மாதங்களாக தேயிலைத் தூள் குறைந்த விலைக்கே ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கத்தினா்களுக்கு முன்பணம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால், தங்களது தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் விவசாயிகள் நெருக்கடியில் உள்ளனா். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...