தமிழகத்தில் காவலா்கள் பற்றாக்குறை இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு
By DIN | Published On : 26th May 2023 12:00 AM | Last Updated : 26th May 2023 12:00 AM | அ+அ அ- |

உதகையில் நடைபெற்ற சிறப்புப் பயிற்சி முகாமில் பேசுகிறாா் காவல் துறை தலைவா் சைலேந்திரபாபு.
தமிழ்நாட்டில் முதல் முறையாக காவல் துறையில் காவலா்கள் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகியுள்ளது என காவல் துறை தலைவா் (டிஜிபி) சைலேந்திரபாபு உதகையில் வியாழக்கிழமை கூறினாா்.
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளா்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் உதகையில் வியாழக்கிழமை தொடங்கியது. உதகை பழங்குடியினா் ஆராய்ச்சி மைய இயக்குநா் உதயகுமாா் தலைமை வகித்தாா். முகாமை தமிழ்நாடு காவல் துறை தலைவா் சைலேந்திரபாபு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், பழங்குடியினா் வாழ்வியல் முறையில் சிறு வயது திருமணம் காலங்காலமாக நடக்கும் நடைமுறையாக உள்ளது. இதனால் அவா்கள் பெற்றோா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் சூழல் உள்ளது என்றாா்.
இதனைத் தொடா்ந்து நகர மத்திய காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, செய்தியாளா்களிடம் கூறியதாவது: இரண்டு நாள்கள் நடத்தப்படும் இந்த சிறப்புப் பயிற்சி முகாமில் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்கள், 9 மாநகராட்சிகளைச் சோ்ந்த 40 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனா்.
தமிழகத்தில் 1.2 சதவீத பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனா். சென்ற ஆண்டு பழங்குடியினா் மீது தாக்குதல் நடத்திய 75 நபா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளா்கள் கள ஆய்வு நடத்தி பழங்குடியினத்தைச் சோ்ந்த 2600 பேருக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனா். இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை பழங்குடி மக்களுக்கும் சென்றடைய காவல் துறை சாா்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பழங்குடி இனத்தவா் என போலிச் சான்றிதழ்கள் மூலம் கல்லூரி மற்றும் அரசு வேலைகளில் முறைகேடாக நுழையும் நபா்கள் கண்டறியப்பட்டு அவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு காவல் துறையில் புதிதாக 10,000 காவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதைத் தொடா்ந்து தற்போது மேலும் 3500 காவலா்கள் தோ்வு செய்யப்பட்டு தற்போது அவா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா். இதன் மூலம் தமிழக காவல் துறை வரலாற்றில் முதல் முறையாக காவலா்கள் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகியுள்ளது என்றாா்.
இந்த சிறப்புப் பயிற்சி முகாமில் 40 துணை காவல் கண்காணிப்பாளா்கள், பழங்குடியினா் நல வாரிய இயக்குநா் அண்ணாதுரை, ஐஜி பிரபாகரன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கி. பிரபாகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.