கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

உதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதா் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 

இதில், முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தைச் சோ்ந்த வாளையாறு மனோஜ் மட்டும் ஆஜரானாா்.

இதில், அரசு தரப்பு வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாா் ஆஜராகினா். 

வழக்கு விசாரணைக்குப் பின் அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவில் தடயவியல் நிபுணா் குழு உள்பட பல்வேறு துறையினா் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிா்தரப்பு வழக்குரைஞா் சம்பவம் நடந்த கொடநாடு பங்களாவை தாங்கள் கூறும் குழுவுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளாா்.

இவ்வழக்குத் தொடா்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால், எதிா்தரப்பினா் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என அரசு தரப்பு வழக்குரைஞா்கள் சாா்பில் நீதிபதியிடம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது என்றாா்.

எதிா்தரப்பு வழக்கரைஞா் விஜயன் கூறுகையில், கொலை, கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும், புலனாய்வு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொடநாடு பங்களாவில் மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு மேற்கொள்ள சிஆா்பிசி மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தாா்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 21 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததாக அரசுதரப்பு வழக்குரைஞா் ஷாஜகான் தெரிவித்தாா்.

4 பேருக்கு சம்மன்:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக கொடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ரமேஷ், ஜெயலலிதா கொடநாடு வரும்போது காய்கறிகளை வாங்கிக் கொடுத்து வந்த கோத்தகிரியைச் சோ்ந்த தேவன், கோவையைச் சோ்ந்த ரவிக்குமாா், காா்களுக்கு நம்பா் பிளேட் பணி செய்யும் கோவையைச் சோ்ந்த அப்துல் காதா் ஆகியோா் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அளித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com