கூலி உயர்வு கோரிக்கை: பாத்திரத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

 திருப்பூரில், கூலி உயர்வு கோரி பாத்திரத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

 திருப்பூரில், கூலி உயர்வு கோரி பாத்திரத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
 திருப்பூர், அனுப்பர்பாளையம் பாத்திரத் தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம், திங்கள்கிழமையுடன் 56-ஆவது நாளாகத் தொடர்கிறது.
இதன் காரணமாக, பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகமும், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில், பாத்திரத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் அனுப்பர்பாளையம்புதூர் அருகே 15-வேலம்பாளையம் சாலை சந்திப்பில்  திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாவட்டச் செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார்.
  இதில் அவர் பேசியதாவது:
  பாத்திரத் தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது. கூலி உயர்வு குறித்து தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள் முன்னிலையில் 7 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 25 சதவீதம், செம்பு, பித்தளைப் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 33.5 சதவீதம் கூலி உயர்வு வழங்க பாத்திர உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும் என்றார்.
 இதில், சி.ஐ.டி.யூ., ஏ.டி.பி., எல்.பி.எப்., எம்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., பி.எம்.எஸ்., காமாட்சியம்மன் பாத்திரத் தொழிற்சங்கத்தினர், பாத்திரத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர். உண்ணாவிரத்தை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் முடித்து வைத்தார்.
 அதையடுத்து, அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஜூன் 21-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது, அனைத்து பாத்திரக் கடைகளையும் மூடுமாறு வலியுறுத்துவது, பாத்திரக் கடைகள், பட்டறைகளுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பொருள்களையும், பட்டறைகளில் இருந்து வெளியூருக்குச் செல்லும் பொருள்களையும் தடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com