தாராபுரத்தில் அமையுமா புறநகர் பேருந்து நிலையம்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தாராபுரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

தாராபுரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
2009-இல் புதிதாக உருவான திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகருக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக தாராபுரம் விளங்குகிறது. இங்கு 1982-இல் மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
திருப்பூர் மாநகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல், வீட்டு வாடகை, சுற்றுச்சூழல் போன்ற பிரச்னைகள் காரணமாக அங்கிருந்து பலரும் தாராபுரம் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். கோவை, திருப்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் தாராபுரம் வழியாகத்தான் செல்கின்றன. இதனால், நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் வந்து செல்கின்றன. போதிய இடவசதி இல்லாததால் பேருந்து நிலையத்துக்குள் கடும் நெரிசலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும், சுற்றுலாப் பேருந்துகளால் பேருந்து நிலையத்துக்கு எதிரேயும் நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் விபத்துகளும் அதிகமாக ஏற்படுகின்றன. இப்பிரச்னைக்குத் தீர்வாக, பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு பயனற்று கிடக்கும் சோளக் கடைவீதி வாரச் சந்தையை புறநகர் பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என சோளக் கடைவீதி வர்த்தகர் சங்கம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் மூலம் வாரச் சந்தையைச் சுற்றியுள்ள வணிகர்கள் பெரிதும் பயனடைவதோடு, நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். சுமார் 100 கடைகளுக்கும் மேல் கட்டப்பட்டுப் பயனற்று கிடக்கும் இந்த வாரச் சந்தை, தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டுள்ளது.
இது குறித்து சோளக் கடைவீதி வர்த்தகர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
வாரச் சந்தை அமைந்துள்ள இடத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க தாராபுரம் நகராட்சியில் 2009-இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேருந்து நிலையம் அமைக்க அப்போதைய நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார். அதன்பின் எந்தக் காரணமும் தெரிவிக்கப்படாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பேருந்து நிலையம் அமைக்க 7 ஏக்கர் காலி இடம் தயாராக உள்ளது. எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு புறநகர் பேருந்து நிலையத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் வெ.கண்ணையன் (பொறுப்பு) புதன்கிழமை கூறியதாவது:
நகராட்சி வாரச் சந்தையில் ரூ. 93 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த மீன் வளாகம் அமைக்க அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளன. இதுதவிர, நகராட்சி ஆடு வதைக் கூடமும் வாரச் சந்தைக்கு மாற்றப்பட உள்ளது. காலியாக உள்ள இடத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப் பரிசீலிக்கப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். தற்போது காலியாக உள்ள வாரச் சந்தை கடைகளில் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்றார்.
போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தமிழக அரசு முயன்று வரும் நிலையில், அனைத்து வசதிகளுடன் தயாராக உள்ள இடத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு தாமதம் காட்டுவது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பேருந்து நிலையம் அமைக்க தாராபுரம் நகராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்மானம் நிறைவேற்றியும், பேருந்து நிலையம் அமைக்கத் தேவையான இடம் தயாராக உள்ள நிலையிலும் நகராட்சி சார்பில் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com