குறைதீர் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு, தர்னா

ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாத காரணத்தால், மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து, தர்னாவில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாத காரணத்தால், மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து, தர்னாவில் ஈடுபட்டனர்.
 மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்று ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஊத்துக்குளி, தாராபுரம், உடுமலை, அவிநாசி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனர்.
 மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்னராமசாமி ஆகியோர் வராததால் இக்கூட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் அமராவதி, திருமூர்த்தி அணைகளை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய சென்றுள்ளதால், அவர்கள் இல்லாமலேயே கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகமது இக்பால், துணை இயக்குநர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கூட்டத்தை நடத்த தொடங்கினர்.
அப்போது, ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் இல்லாமல் கூட்டம் நடத்துவதால் எவ்விதப் பயனும் ஏற்படாது என்று கூறி, அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட  விவசாயிகளும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், இதற்குக் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டவாறே வெளிநடப்பு செய்தனர். ஒருசில விவசாயிகள் மட்டும் கூட்ட அரங்கில் அமர்ந்து இருந்தனர்.
 அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் முன்பாக விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டப் பிரதிநிதிகள், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள், கொங்குநாடு விவசாயிகள் கட்சி நிர்வாகிகள், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை உரிய முறையில் நடத்தத் தவறிய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
 அப்போது, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை. பிற மாவட்டங்களில் இந்த நிலை இல்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 சாய, சலவைப் பட்டறைகளில் இருந்து தொடர்ந்து கழிவுகள் நொய்யல் உள்ளிட்ட  நீர்நிலைகளில் விடப்படுகின்றன. தனியார் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களும் இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆலைகளின் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் ஆற்று நீரில் தற்போதுள்ள உப்புத் தன்மை குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். என விவசாயிகள் வலியுறுத்தனர்.
 விவசாயிகளிடம், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
 இந்நிலையில், சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார், வேளாண் துறை அதிகாரிகள், கூட்டரங்கில் இருந்த ஒருசில விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com