போலி ஆவணங்கள் மூலம் ரூ. 18 கோடி வங்கிக் கடன் மோசடி: தம்பதி கைது

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 18 கோடி கடன் பெற்று மோசடி செய்த தம்பதி திங்கள்கிழமை  கைது செய்யப்பட்டனர்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 18 கோடி கடன் பெற்று மோசடி செய்த தம்பதி திங்கள்கிழமை  கைது செய்யப்பட்டனர். மேலும், வங்கி ஊழியர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் தனது மனைவி பிரியா, தனது நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகிய இருவர் பெயரிலும் தனித்தனியே போலியாகப் பின்னலாடை நிறுவனங்களைத் தொடங்கி தனியார் வங்கியில் ரூ. 10.25 கோடி கடன் பெற்றுள்ளார்.  
இந்நிலையில்,  வங்கிக் கடனை அடைக்க வேண்டிய நிலையில் செந்தில்குமார், பணத் தேவை அதிகம் உள்ளவர்களையும்,   வங்கிக் கடன் பெற முடியாமல் தவித்த பின்னலாடை உரிமையாளர்களையும் அணுகி வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். அதை நம்பி பலரும் வங்கிக் கடன் பெற தங்கள் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அவரிடம் கொடுத்துள்ளனர். செந்தில்குமார் இந்த ஆணவங்களை தனக்கு ஏற்றார்போல மாற்றி அமைத்து போலி ஆவணங்களாகத் தயாரித்து வங்கிக் கடன் பெற்றுள்ளார்.  
அவர் ஹாரூண்ரஷித் பெயரில் ரூ. 8 கோடியே 34 லட்சம் கடன் பெற்றுக்கொண்டு, ஹாண்ரஷிதிடம் ரூ. 5 கோடியை மட்டுமே கொடுத்துள்ளார். சிவப்பிரகாசம் பெயரில் ரூ. 6 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றுக்கொண்டு, அவரிடம் ரூ. ஒரு கோடியே 12 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளார். மேலும், ராமசாமி பெயரில் ரூ. 3 கோடியே 92 லட்சம் கடன் பெற்றுக்கொண்டு, அந்தத் தொகையை அவருக்கு தராமல் மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில், வங்கியில் இருந்து மொத்தக் கடனை தொகையையும் செலுத்துமாறு நிர்பந்தம் அளிக்கப்பட்ட நிலையில்,
தாங்கள் ஏமாற்றப்பட்டது மேற்கண்ட மூவருக்கும் தெரியவந்தது. இதையடுத்து மூவரும் செந்தில்குமார் மீது கடந்த 3 மாதங்களுக்கு முன் மாநகர குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்த குற்றப் பிரிவு போலீஸார் மொத்தம் ரூ.18 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் வங்கி ஊழியர் சோமயாஜுலுவை கைது செய்தனர். அவர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், குற்றப் பிரிவு போலீஸார் செந்தில்குமார், அவரது மனைவி பிரியா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், வங்கி ஊழியர்களான அனந்தநாயக், சங்கர், பத்மா ரெட்டி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com