திருப்பூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பது தகர்க்கப்படும்: வேட்பாளர் கே.சுப்பராயன் நம்பிக்கை
By DIN | Published On : 17th April 2019 09:03 AM | Last Updated : 17th April 2019 09:03 AM | அ+அ அ- |

திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக கோட்டை என்பதை இந்தத் தேர்தலில் தகர்க்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசியல் சட்டம், பண்பாடு, இந்து மதம் முன்வைக்கும் அடிப்படைக் கொள்கைகளை தடம் புரளச் செய்யும் பாஜகவின் அரசியலை எதிர்த்து நடைபெறும் அரசியல் போராட்டம் தான் இந்தத் தேர்தல்.
ஆகவே, இந்தத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.
ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு, தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலையை உருவாக்குவது என்பதுதான் பாஜகவின் கொள்கை என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி முதல் பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
ஆனால், வெளிப்படைத் தன்மை இல்லாத நிர்வாகம் என்பது அவர்களின் பல நிர்வாக நடவடிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளன. குறிப்பாக ரஃபேல் ஒப்பந்தம் பாதுகாப்புத் துறைக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை என்றால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.
ஆனால், விசாரணைக்கு மறுக்கிறார்கள். ஆகவே, பாஜக ஊழலை எதிர்க்கும் கட்சி அல்ல. அதிமுகவும், ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். இரண்டையும் பிரிக்கவே முடியாது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்ததில் இருந்தே தெரிகிறது இவர்கள் ஊழல் எதிர்ப்பாளர்கள் அல்ல. தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்கள் அளித்த ஆதரவு மூலம் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகவே, திருப்பூர் மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக அதிமுக கோட்டை இல்லை என்பதை திமுக கூட்டணி தகர்க்கும் என்றார்.
இந்தப் பேட்டியின்போது திமுக வடக்கு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மதிமுக மாநகரச் செயலாளர் சு.சிவபாலன், திமுக மாநகரச் செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் பணிக்குழுப் பொருளாளர் எம்.கே.எம்.பாலு உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...