சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகம் முற்றுகை

வெள்ளக்கோவிலில் சொத்து வரி,  குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வெள்ளக்கோவிலில் சொத்து வரி,  குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தீர்த்தாம்பாளையம், சிவநாதபுரம், சேரன் நகர், புதுக்காடு பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நகராட்சி அலுவலகத்தில் திடீரென திரண்டனர். நகராட்சி ஆணையரைச் சந்தித்து மனுக் கொடுக்க வந்ததாகக் கூறிய அவர்கள் ஆணையர் இல்லாததால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
வெள்ளக்கோவில் நகராட்சி தன்னிச்சையாக மிக அதிக அளவில் வரியினங்களை உயர்த்தி உள்ளது. கரூர், ஈரோடு மாநகராட்சிகள், காங்கயம் நகராட்சியைக் காட்டிலும் இங்கு வரி விதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு 50 ரூபாயாக இருந்த சொத்து வரி 2015ஆம் ஆண்டில் ரூ. 320, 2018 - 19 இல் ரூ. 500 என உயர்த்தப்பட்டுள்ளது.  2017இல் 780 ரூபாயாக இருந்த ஓராண்டுக்கான குடிநீர்க் கட்டணம் தற்போது 1,836 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு குறித்து முறைப்படி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பாததால்  பலரும் 2018 - 19 ஆம் ஆண்டுக்கு பழைய கட்டணத்தையே செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில்,  தற்போது வரி கட்டியவர்கள், கட்டாதவர்கள் என அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொழில்கள் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில் கூடுதல் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, உயர்த்தப்பட்ட கட்டணங்களைப் பழைய முறைப்படி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com