பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க பனியன் தொழிற்சங்கங்கள் முடிவு

மத்திய அரசுக்கு எதிராக ஜனவரி 8, 9 ஆம் தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க பனியன் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 

மத்திய அரசுக்கு எதிராக ஜனவரி 8, 9 ஆம் தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க பனியன் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 
திருப்பூர் சிஐடியூ அலுவலகத்தில் அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்: 
திருப்பூர் பனியன் தொழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதில், மத்திய அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, டிராபேக் குறைவு, நூல் விலை உயர்வு ஆகிய கொள்ளை சார்ந்த முடிவுகள் இத்தகைய நிலைக்குக் காரணம். இதனால் பனியன் மற்றும் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், இந்தத் தொழில்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 
ஆகவே மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் சார்பில் ஜனவரி 8, 9ஆம் தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் திருப்பூரில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்று வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும். 
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர்,  அவிநாசி, ஊத்துக்குளி, உடுமலை, தாராபுரம் ஆகிய 5 இடங்களில் ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்திலும் பனியன் தொழிலாளர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில்,  சிஐடியூ பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, ஏஐடியூசி தலைவர் சி.பழனிசாமி, செயலாளர் என்.சேகர், கே.எம்.இசாக், எல்பிஎப் பொதுச் செயலாளர் க.ராமகிருஷ்ணன், ஐஎன்டியூசி செயலாளர் ஏ.சிவசாமி, எச்எம்எஸ் செயலாளர் ஆர்.முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com