திருப்பூர் மாவட்டத்தில் 493 பயனாளிகளுக்கு ரூ. 3.23 கோடி மதிப்பில் திருமண நலத்திட்ட உதவி

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம் வட்டங்களில் 493 பயனாளிகளுக்கு ரூ. 3.23 கோடி மதிப்பில் திருமண ந

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம் வட்டங்களில் 493 பயனாளிகளுக்கு ரூ. 3.23 கோடி மதிப்பில் திருமண நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துவள்ளியம்மை திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.
இதில், 323 பயனாளிகளுக்கு ரூ. 2.10 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி, தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம் ஆகியவற்றை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். அவர் பேசியதாவது:
தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும்,  2016 ஆம் ஆண்டுமுதல் ஏழைப் பெண்களின் திருமண நிதியுதவித் திட்டத்தை விரிவுபடுத்தி திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்கமும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ. 25 ஆயிரமும், பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி அளிக்கப்படுகிறது என்றார். 
தாராபுரம் வட்டத்தைச் சார்ந்த பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்த 208 பயனாளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம், 10,  12 ஆம் வகுப்பு முடித்த 118 பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் தொகையுடன் திருமாங்கல்யத்துக்கு தலா 8 கிராம் தங்கம் என மொத்தம் ரூ. 2.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  முன்னதாக தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பையும் அமைச்சர் வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மக்களவை உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன், தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.காளிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபு,  மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், மாவட்ட சமூகநல அலுவலர் பூங்கோதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
காங்கயத்தில்... : திருமண நிதியுதவி வழங்கும் விழா காங்கயத்தில் சென்னிமலை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளைச் சேர்ந்த 167 பெண்களுக்கும் தலா 8 கிராம் வீதம் திருமாங்கல்யத்திற்கு தங்கம் உள்பட மொத்தம் ரூ. ஒரு கோடியே 14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில்,  மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com