ஊதியூர் கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரம்: இந்து முன்னணியினர், தனியார் நிறுவன ஆதரவாளர்கள் மோதல்

காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூரில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார்

காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூரில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் பால் பண்ணை நிறுவன ஆதரவாளர்களுக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூரில் புகழ்பெற்ற உத்தண்ட வேலாயுதசாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இந்தக் கோயிலுக்கு அப்பகுதியில் சுமார் 1,200 ஏக்கர் நிலம் உள்ளது. 
இந்த நிலையில், காங்கயம்-  குண்டடம் சாலையில், கருக்கம்பாளையம் பிரிவு அருகில் ஊதியூர் மலை அடிவாரத்தில் பெரிய அளவிலான பால் பதப்படுத்தும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை பிரபல தனியார் நிறுவனம் 2017ஆம் ஆண்டு தொடங்கியது. 
இதற்கான கட்டடப் பணிகள் நடந்து வந்த நிலையில், சிவன்மலை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு, கட்டுமானப் பணி நடக்கும் இடம் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயிலுக்குச் சொந்தமானது என்பதால் கட்டடப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். ஆயினும் கட்டுமானப் பணியை தனியார் நிறுவனம் தொடர்ந்தது.
அதையடுத்து, இந்து முன்னணி அமைப்பினர் அந்த இடத்தை 2017 நவம்பரில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக, கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஓர் ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த கட்டடப் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டன. அப்போது, இந்து சமய அறநிலையத் துறையின் சிவன்மலை உதவி ஆணையர் கண்ணதாசன், கோயில் நிலத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  எனவே, கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இந்து முன்னணியினர், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தை மீண்டும் முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த காங்கயம் வட்டாட்சியர் மகேஸ்வரன் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கோயில் நிலத்தை தனியார் நிறுவனத்திடமிருந்து மீட்க வலியுறுத்தி, ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயிலில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு விளக்கேற்றி வழிபாடு நடத்தப் போவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது.  அதே நேரம், ஊதியூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பால் நிறுவன ஆதரவாளர்கள் மலையடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் வழிபடப் போவதாகவும் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை 10 மணியிலிருந்தே ஊதியூர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைலாசநாதர் கோயில் முன்பு திரண்டிருந்தனர். உத்தண்ட வேலாயுதசாமி கோயில் அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் திரண்டிருந்தனர்.  அங்கு இரு தரப்பினரும் முழக்கங்களை எழுப்பியதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த ஏடிஎஸ்பி குணசேகரன், காங்கயம் டிஎஸ்பி செல்வம் தலைமையிலான போலீஸார் அவர்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தினர். ஆனால், பால் பண்ணை நிறுவன ஆதரவாளர்கள் தாராபுரம்- ஈரோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்து முன்னணியினரும் மறியல் செய்யவே  அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இருதரப்பினரையும் காங்கயம் வட்டாட்சியர் மகேஸ்வரனும் போலீஸாரும் சமாதானப்படுத்தினர். அப்போது காங்கயம், திருப்பூர் பகுதியிலிருந்து வந்த இந்து முன்னணியினர் ஊதியூர் பேருந்து நிறுத்தத்தைக் கடந்தபோது, அங்கு நின்றிருந்த சிலர் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர். போலீஸார் லேசான தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டினர்.
இதுதொடர்பாக இரண்டு தரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் காரணமாக, ஊதியூர் பகுதியில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. கயல்விழி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com