ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஊழியர்கள் இல்லாமல் பூட்டிக் கிடந்த ஆதி திராவிடர் நலத் துறை அலுவலகம்
By DIN | Published On : 29th January 2019 05:34 AM | Last Updated : 29th January 2019 05:34 AM | அ+அ அ- |

ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக காங்கயத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத் துறை அலுவகம் திறப்பதற்கு ஆளில்லாமல் திங்கள்கிழமை பூட்டிக் கிடந்தது.
காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் ஆதி திராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக இந்த அலுவலகம் திறப்பதற்கு ஆள் இல்லாமல், மூடிக் கிடந்தது. தனி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காங்கயம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கான இந்த ஆதி திராவிடர் நலத் துறை அலுவலகம் மூடிக் கிடந்ததால் கோரிக்கை மனுக்களோடு வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றனர்.