சுற்றுலா அழைத்துச் செல்வதாக பல கோடி ரூபாய் மோசடி: டிராவல்ஸ் அதிபர் கைது
By DIN | Published On : 01st June 2019 09:26 AM | Last Updated : 01st June 2019 09:26 AM | அ+அ அ- |

வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த திருப்பூர் டிராவல்ஸ் நிறுவன அதிபரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் பங்களா பேருந்து நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் டி.மணிகண்டன் (39). இவர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனம் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி கோடிக் கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.
அதன் பிறகு டிராவல்ஸ் நிறுவனம் மூடப்பட்டதுடன், மணிகண்டனும் தலைமறைவாகிவிட்டார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் வடக்கு மற்றும் மாநகர குற்றப் பிரிவு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாநகர குற்றப் பிரிவு காவல் துறையினர் மணிகண்டனைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே மணிகண்டன் நின்றுகொண்டிருப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவரது அலுவலகத்தில் இருந்த கடவுச் சீட்டுகள், கணினி, கோப்புகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.