அரசு துவக்கப் பள்ளியில் அதிக மாணவர் சேர்க்கை: தாயம்பாளையம் மக்களுக்கு ஆட்சியர் பாராட்டு

பல்லடம் அருகிலுள்ள தாயம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் அதிக அளவில் மாணவ, மாணவியர் சேர்க்கையை ஏற்படுத்திய தலைமை ஆசிரியர், ஊர் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார்.

பல்லடம் அருகிலுள்ள தாயம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் அதிக அளவில் மாணவ, மாணவியர் சேர்க்கையை ஏற்படுத்திய தலைமை ஆசிரியர், ஊர் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார்.
பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், கண்டியன்கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட தாயம்பாளையத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய தலைமையாசிரியர் சாந்தி, ஊர்ப் பிரமுகர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது. 
தற்பொழுது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தைப் பொருத்த வரை முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் தீவிர முயற்சியால், நடந்து முடிந்த பொதுத்தேர்வுகளில் மாநிலத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளோம். 
அதே போல, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. தற்போது அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோரிடையே ஏற்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. 
தாயம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியானது கடந்த 1963 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியைச் சுற்றிலும் அதிகமான குக்கிராமங்கள் அமைந்துள்ளன. 
இப்பள்ளியின் மாணவர் வருகை குறைந்ததால், கடந்த 2016-2017 ஆம் ஆண்டில் ஒரு மாணவருடன் செயல்பட்டபோது பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் சூழல் நிலவியது. அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஊர்  மக்களின் பெரும் முயற்சியால் 2017-2018 ஆம் ஆண்டில் 62 மாணவர்களும் 2018- 2019 ஆம் ஆண்டில் 46 மாணவ, மாணவியர்களும் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றனர்.
தற்போதைய கல்வியாண்டில் தாயம்பாளையத்துக்கு அருகில் வேலம்பட்டி, காடையூர், அலகுமலை, பெருந்தொழுவு ஆகிய பகுதிகளில் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் பயின்ற 39 மாணவர்களும் இங்கு எல்கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்த்துள்ளனர். 
இப்பள்ளியின் தலைமையாசிரியர், ஊர் மக்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர் ஆகியோரது முயற்சியால் சுமார் 107 மாணவ, மாணவிகளுடன் இப்பள்ளி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. 
இப் பள்ளியில் தமிழ், ஆங்கில வாசிப்புப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி, தினம் ஒரு வரைபடப் பயிற்சி, கற்றல் செயல்பாடுகள் பயிற்சி, கராத்தே, யோகா போன்றவை அளிக்கப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கக் கூடிய மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்துவரும் வகையில் வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். 
இந்நிகழ்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com