வருவாய்த் தீர்வாய முகாமுக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தல்

வருவாய்த் தீர்வாய முகாம் (ஜமாபந்தி) நடைபெற்று வரும் காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்

வருவாய்த் தீர்வாய முகாம் (ஜமாபந்தி) நடைபெற்று வரும் காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என மனு கொடுக்க வந்த பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயம் கடந்த 3 நாள்களாக  நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 நாள்கள் நடைபெறவுள்ள இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று அதன் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில்,  வருவாய்த் தீர்வாயம் நடைபெற்று வரும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டதால் மேலும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் தற்காலிமாக வேறு இடத்துக்கு கொண்டு செல்லாமல் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மேலும் இடநெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் காலி இடம் இருந்தும் தற்காலிகமாக இந்த கனரக வாகனங்களை இடம் மாற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சி எடுக்கவில்லை. 
இதனால்,  வருவாய்த் தீர்வாயத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் தங்களது இருசக்கர  வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், அலுவலகத்துக்கு வெளியே உள்ள திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்தனர். இங்கு அதிக அளவில் வாகனங்களை நிறுத்தியதால் திருச்சி-கோவை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த முகாமில், கழிப்பறை வசதி செய்து தரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.  இருந்த கழிவறைகளையும் போதிய பராமரிப்பில்லாமல் பூட்டி வைத்திருந்தனர்.  
வருவாய்த் தீர்வாயத்தில் மனு கொடுப்பதற்கு ஒவ்வோர் நாளும் ஒரு பகுதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், அங்கு வந்தவர்கள் அமர வைக்கப்பட்டு ஒவ்வோர் கிராமம், கிராமமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுப்பிவைக்கப்பட்டனர். ஒலிபெருக்கி வசதி இல்லாததால் அலுவலக உதவியாளர் கிராமத்தின் பெயரைக் கூறி அழைக்கும்போது, கூட்டத்தில் சரியாக சப்தம் கேட்காமல் தங்கள் கிராமப் பகுதி முடிந்தது தெரியாமல் மனுவோடு பலர் காத்திருந்தனர்.
எனவே, ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்லும் நிகழ்ச்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வட்டாட்சியர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com