அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும்: சுகி. சிவம் வலியுறுத்தல்
By DIN | Published On : 04th March 2019 07:52 AM | Last Updated : 04th March 2019 07:52 AM | அ+அ அ- |

அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொற்பொழிவாளர் சுகி.சிவம் வலியுறுத்தினார்.
திருப்பூரில் உள்ள வித்யா கார்த்திக் கல்யாண மண்டபத்தில் தினமணி நாளிதழ் சார்பில் "ஆரோக்கியம்' இலவச மருத்துவக் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, "ஆரோக்கியமே ஆனந்தம்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தார். இதில் சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேசியதாவது:
சிறு விஷயங்களை நாம் கவனிக்காமல் விடுவதால் பிற்காலத்தில் பெரிய விளைவுகள் ஏற்படுகின்றன. நாம் பள்ளிகளில் படிக்கும்போது ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் உடற்பயிற்சியைக் காலம் முழுவதும் தொடர வேண்டும். உங்களின் மீது அன்பு, அக்கறை காட்டும் நல்ல நண்பரான மருத்துவரைக் கண்டுபிடித்து விட்டால் 80 சதவீதப் பிரச்னைகள் குறைந்துவிடும்.
மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். நமக்கு கொடுக்கும் மருந்துகளை நாம் பிறருக்குக் கொடுப்பதைவிட இந்த உலகில் கொடுமையான விஷயம் வேறு இல்லை. நம் உடல் எடைக்குத் தகுந்தவாறு மருந்துகள் எழுதிக் கொடுப்பார்கள். மருத்துவர் ஒரு முறை எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டை அடுத்த முறை வியாதி வரும்போது பயன்படுத்தக் கூடாது.
ஒரு காலத்தில் மருத்துவம் சேவையாக இருந்தது. தற்போது தொழிலாக மாறிவிட்டதால் சமூகத்தில் நிறைய சிக்கல்கள் எழுகின்றன. இதனால், நாம் கவனமாக இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் லட்சங்கள் இருந்தால்தான் சிகிச்சை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம் உடல் என்பது விலை மதிப்பற்ற கருவியாகும். நமது உடலின் அனைத்து பாகங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் குறைந்தபட்சம் ரூ.2 கோடி வரும். ஆனால், இதன் மதிப்பு நமக்குத் தெரியாததற்கு காரணம் உடலைக் கடவுள் இலவசமாகக் கொடுத்ததுதான். ஆகவே, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட இந்த உடலைப் பாதுகாப்பது அவசியமாகும் என்றார். முன்னதாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோவை பதிப்பு முதுநிலை மேலாளர் க.தியாகராஜன் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், அஸ்வின் மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் எல்.பி.தங்கவேலு மற்றும் வாசகர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.