திருப்பூர் அருகே சாலையோரத்தில் வீசப்பட்ட கோழிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
By DIN | Published On : 16th May 2019 08:38 AM | Last Updated : 16th May 2019 08:38 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே பண்ணைகளில் உயிரிழந்த கோழிகளை சாலையோரங்களில் குவியல் குவியலாக வீசப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் தாயம்பாளையம், நவக்கொம்பு, மேட்டுக்கடை, மானூர்பாளையம், எரகாம்பட்டி, தேவராஜபட்டணம், பெல்லம்பட்டி, மருதூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளில் வளரும் பருவத்தில் சிலவகை நோய் தாக்குதல்களால் உயிரிழப்பது வழக்கம். அவ்வாறு, உயிரிழந்த கோழிகளை குழிகள் வெட்டி பாதுகாப்பாக புதைக்கப்பட வேண்டும் என கோழிகளை ஒப்பந்த முறையில் வளர்க்க விடும் நிறுவனங்கள் பண்ணையாளர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், பண்ணயாளர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் உயிரிழக்கும் கோழிகளை சாக்குகளில் போட்டு ஓடைகள், பாலங்கள் மற்றும் சாலையோரங்களில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர்.
அவ்வாறு வீசப்படும் கோழிகளை நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உட்கொள்வதால் அவைகளுக்கும் நோய் தாக்கி உயிரிழக்கின்றன.
மேலும், கோழிகளின் இறகுகள் காற்றில் பறந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில், குண்டடத்தில் இருந்து மேட்டாம்பாளையம் செல்லும் சாலையில் தனியார் பால் குளிரூட்டும் நிறுவனம் அருகே உயிரிழந்த கோழிகளை குவியல் குவியலாக மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
மேலும், கோழிகள் வீசப்பட்டு குவியலாக கிடக்கும் பகுதிகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு நோய் தொற்றும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுவெளியில் உயிரிழந்த கோழிகளை வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப் பண்ணையாளர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.