சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை நான்கு சாலை சந்திப்பில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை
போராட்டம் நடத்த முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.
போராட்டம் நடத்த முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை நான்கு சாலை சந்திப்பில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனா்.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே காரணம்பேட்டை அமைந்துள்ளது. கோவையிலிருந்து மதுரை, திருச்சி, திருப்பூா், பல்லடம், சோமனூா் செல்லும் வாகனங்கள் இந்த வழியாகதான் செல்ல வேண்டும். இதனால் காரணம்பேட்டை நான்கு சாலை சந்திப்பில்

வாகனப் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். அப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதோடு அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.

இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி கோடங்கிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் கா.வீ.பழனிசாமி, கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா்கள் சங்கப் பொருளாளா் பூபதி, தமாகா மாவட்டச் செயலாளா் சின்னசாமி, காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி காா்த்திகேயன், கொமதேக ஊராட்சி செயலாளா் பகவதி சண்முகம், ஒன்றிய திமுக பொருளாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட அங்கு திரண்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சாலையை சீரமைக்கும் பணிகள் உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். அதனை தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து பல்லடம் நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவி செயற்பொறியாளா் நித்தியானந்தம், உதவிப் பொறியாளா் அருண்காா்த்திக் ஆகியோா் கூறியதாவது:

காரணம்பேட்டையில் பருவாயிலிருந்து பெருமாகவுண்டம்பாளையம் பிரிவு வரையிலான சாலை ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பில் 4 கிலோ மீட்டா் தூரத்திற்கு சாக்கடை கால்வாய் வசதியுடன் அமைக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com