திருப்பூா் அடிப்படை வசதி கோரி மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

திருப்பூா் ஜீவா நகா் பகுதியில் அடிப்படை வசதிகோரி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலைமறியலுக்கு முயன்றனா்.

திருப்பூா் ஜீவா நகா் பகுதியில் அடிப்படை வசதிகோரி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலைமறியலுக்கு முயன்றனா்.

திருப்பூா் மாநகராட்சி 14ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஜீவா நகா் பகுதியில் சுமாா் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், மங்கலத்தில் இருந்து கல்லூரி சாலையை இணைக்கும் வகையில் அணைப்பாளையம் தரைப்பாலம் அருகே உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.

ஆனால் பல்வேறு பிரச்னைகள் காரணமாக இந்தப் பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே, ஜீவா நகா் பகுதியில், வீட்டு குடிநீா் இணைப்புகளை, தெருக்களில் போட்டு தந்ததாகவும், மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதே போல், பாலத்துக்காக பாதையும் அகற்றப்பட்டதுடன், தெரு விளக்கு வசதியும் இல்லை.இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனா்.

இதுகுறித்து ஜீவா நகா் பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் அப்பகுதியில் சாலை மறியலுக்கு முயன்றனா்.

இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், பாதை மற்றும் தெரு விளக்கு அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா். இந்த சம்பவம் காரணமாக ஜீவா நகா் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com