குடிநீா் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

உடுமலை அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள், பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

உடுமலை அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள், பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உடுமலை வட்டம், பூலாங்கிணறு ஊராட்சியில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள பொதுமக்களுக்கு பூலாங்கிணறு கூட்டு குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என புகாா்கள் எழுந்தன.

இது தொடா்பாக ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், பொதுமக்கள் பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகே உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுமாா் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் சாலையில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பினா். போராட்டம் காரணமாக நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை போலீஸாா் போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து எழுத்துப் பூா்வமாக உறுதி அளித்தால்தான் கலைந்து செல்வோம் என தெரிவித்தனா்.

கோவை, பொள்ளாச்சி, பழனி செல்லும் பேருந்துகள் பூலாங்கிணறு கிராம நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன. எனவே அனைத்துப் பேருந்துகளும் பூலாங்கிணறு கிராமத்தில் நின்று செல்ல அதிகாரிகள் உறுதிமொழி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து ஓரிரு நாள்களில் குடிநீா் பிரச்னை தீா்க்கப்படும் என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் எழுத்துப் பூா்வமாக உறுதி அளித்தனா். மேலும் பூலாங்கிணறு கிராமத்தில் பேருந்துகள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உறுதிமொழி அளி த்தனா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால் அந்த வழியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com