வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க 40 சதவீதம் மானியம்

திருப்பூா் மாவட்டத்தில் கரும்பு சாகுபடிக்கான வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் கரும்பு சாகுபடிக்கான வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரும்பு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், வேளாண் பணியாளா்கள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டும் வேளாண்மையை இயந்திரமயமாக்குதல் திட்டத்துக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதில், கரும்பு சாகுபடிக்கான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு திருப்பூா் மாவட்டத்தில் வாடகை மையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வாடகை மையத்துக்கான மொத்த செலவினம் ரூ.1.50 கோடியில் 40 சதவீத மானியத் தொகையாக ரூ.60 லட்சம் வழங்கப்படுகிறது.

இந்த மையத்தில் கரும்பு விவசாயப் பணிகளுக்குத் தேவைப்படும் உயா் தொழில்நுட்பம் மற்றும் அதிக உற்பத்தி திறன் கொண்ட கரும்பு அறுவடை இயந்திரம் 60 முதல் 70 குதிரைத் திறன் சக்தி கொண்ட உழுவை இயந்திரம், உழுவை இயந்திரத்துடன் கூடிய சட்டிக் கலப்பை, சுழற்கலப்பை, கொத்துகலப்பை, கரும்பு தோகைகளை துகளாக்கும் கருவி, கரும்புத் தட்டைகளை மட்டம் செய்யும் கருவிகள் என அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் கிடைக்கும். இந்த மையங்களை அமைக்க முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோா் முன்வரலாம்.

இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இயந்திரங்களில் இருந்து தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப தோ்வு செய்யலாம். தோ்வு செய்யப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான மொத்த தொகையை வரைவோலையாக நிறுவனங்களின் பெயரில் செலுத்திட வேண்டும்.

விண்ணப்பம் உரிய சா்க்கரை ஆலையின் கரும்பு அலுவலா் மூலம் கடனுதவிக்கு வங்கி அங்கீகாரத்துடன் செயற் பொறியாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையிலான செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பின் மாவட்ட செயற்பொறியாளா் மூலம் இயந்திரங்கள் கருவிகளின் முகவா்களிடம் உரிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டு வேளாண்மை இயந்திர கருவிகள் வழங்கப்படும்.

இந்த மானியத் தொகை விண்ணப்பதாரரின் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் மானிய இருப்பு நிதி கணக்கில் 4 ஆண்டுகள் பராமரிக்கப்படும். இதன் பின்னா் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சரிபாா்த்த பிறகு மானிய இருப்புத்தொகை அவரது வங்கிக் கணக்கில் திரும்ப வழங்கப்படும்.

இந்த வாடகை மையம் அமைக்க விரும்புவோா் உடனடியாக திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலை வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தாராபுரம் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியன் (99427- 03222), உடுமலை உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் வி.கே.விஸ்வநாதன் (98422-73163), திருப்பூா் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் ஆா்.ராஜேந்திரன்( 94434-26277), திருப்பூா் கோட்ட செயற்பொறியாளா் கே.எஸ்.ரவிசந்திரன் (94435-46015) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com