தீபாவளி பண்டிகை: திருப்பூரில் இருந்து 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 
போக்குவரத்துத் துறை சார்பில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 7 புதிய பேருந்துகளின் சேவைத் தொடக்க விழாவானது மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார்.  
அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 
அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் போக்குவரத்துத் துறை மூலம் ரூ.109 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய 370 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து திருப்பூர் மண்டலத்தில் ரூ.2.06 கோடி மதிப்பில் 7 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பரமக்குடி, பழனி, ஓமலூர் ஆகிய ஊர்களுக்கு புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 
பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 300 சிறப்பு பேருந்துகள் மதுரை, பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதிலும் கடந்த காலங்களில் கோமாரி நோய் தக்கியப் பகுதிகள் குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.
இதற்கான பட்டியல் கிடைத்தவுடன் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் மாவட்டத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்படும். இதன்மூலம் கால்நடை மருத்துவர்கள் உடனடியாகச் சென்று விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்றார்.
முஸ்லிம் பெண்களுக்கு நலத்திட்ட  உதவிகள்: இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் கீழ் 616 முஸ்லிம் பெண்களுக்கு ரூ.38.03 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
 இந்நிகழ்ச்சிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), உ.தனியரசு (காங்கயம்), போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் மோகன், துணை மேலாளர்கள் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com