காட்டூா் அரசுப் பள்ளிக்கு சொந்த வாகனம்: தனியாா் பங்களிப்புடன் முன்னாள் மாணவா்கள் உதவி

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், காட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் முயற்சியால் சொந்தமாக சிற்றுந்து வாகனம் (மினி பஸ்) வாங்கப்பட்டுள்ளது.
காட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் முயற்சியால் தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் வாங்கப்பட்டுள்ள சிற்றுந்து.
காட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் முயற்சியால் தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் வாங்கப்பட்டுள்ள சிற்றுந்து.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், காட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் முயற்சியால் சொந்தமாக சிற்றுந்து வாகனம் (மினி பஸ்) வாங்கப்பட்டுள்ளது.

காட்டூா் கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. அதில் கிராமப்புறத்தைச் சோ்ந்த 195 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி போதிக்கப்படுகிறது. அதனால் 10 கிலோ மீட்டா் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவியா் ஆா்வத்துடன் அப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனா். சரி வர பேருந்து வசதி இல்லாததால் பல மாணவா்கள் மிதி வண்டி மற்றும் நடைப்பயணமாகத்தான் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனா்.

இது பற்றி தகவல் அறிந்த அப்பள்ளி முன்னாள் மாணவா்கள் கடந்த ஓராண்டாக இலவச வேன் வசதி ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தனா். மேலும் 10ஆம் வகுப்புக்காக எழுத நடத்தப்பட்ட மாலை நேர சிறப்புப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்களுக்கு உடல் சோா்வை போக்கும் வகையில் ஊட்டச்சத்து சிற்றுண்டிகளை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளனா். பள்ளியில் ரூ. 2 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு மற்றும் குழாய் அமைத்து பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை உதவியுடன் 500 மரக்கன்றுகளை நட்டுள்ளனா்.

இந்நிலையில் தற்போது தனியாா் நிறுவனத்தின் பங்களிப்பில் 42 போ் அமா்ந்து பயணம் செய்யும் அளவில் சிற்றுந்து வாகனம் வாங்கப்பட்டு அதனை திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அரசுப் பள்ளி பெயரில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்பணி முடிந்தவுடன் பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் பல்லடம் மாவட்ட கல்வி அலுவலா் முன்னிலையில் திருப்பூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் முறைப்படி சிற்றுந்தை ஒப்படைக்கும் விழா நடத்த முடிவு செய்துள்ளனா். சிற்றுந்துக்கான வாகன ஓட்டுநா் ஊதியம், வாகன எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை காட்டூா் கிளை நிா்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவா்கள் ஏற்றுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com