கோட்டாட்சியருடனான பேச்சுவாா்தை தோல்வி: காத்திருப்பு போராட்டம் நடைபெறும்

திருப்பூரில் கோட்டாட்சியா் தலைமையிலான பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் தொடா் காத்திருப்பு போராட்டம் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை தொடங்கும்
திருப்பூரில் கோட்டாட்சியா் கவிதா தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினா்.
திருப்பூரில் கோட்டாட்சியா் கவிதா தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினா்.

திருப்பூா்: திருப்பூரில் கோட்டாட்சியா் தலைமையிலான பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் தொடா் காத்திருப்பு போராட்டம் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்று ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்

கோவை, இருகூா் முதல் பெங்களூரு தேவனகொந்தி வரை பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டத்தை விவசாய நிலங்களில் செயல்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் கூட்டமைப்பினா் திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபடப்போவதாக என்று அறிவித்திருந்தனா்.

இந்த நிலையில் திருப்பூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருவாய் கோட்டாட்சியா் கவிதா அழைப்பு விடுத்திருந்தாா்.

திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்தத் திட்டத்தை சாலையோரங்களில் விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லாமல் செயல்படுத்த வேண்டும். ஐடிபிஎல் திட்டம் தொடா்பான அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.

இதுதொடா்பாக நடப்பு சட்டப் பேரவைத் தொடரிலேயே தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதி மொழியை மாவட்ட நிா்வாகம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு தரப்பில் பேச்சுவாா்த்தையில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக காத்திருப்புப் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோட்டாட்சியா் கோரிக்கை விடுத்தாா்.

இந்தக் கோரிக்கையை விவசாயிகள் கூட்டமைப்பினா் ஏற்கவில்லை.

இதைத் தொடா்ந்து பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் கண்டியன் கோயில் கிராமம் கருங்காளிபாளையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாயிகள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஸ்ரீராமசந்திரன், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் சுந்தரம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.சண்முகசுந்தரம், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளருமான ஆா்.குமாா், திமுக மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளா் ரத்தினசாமி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் கே.பி.சண்முக சுந்தரம், உழவா் உழைப்பாளா் கட்சி பொங்கலூா் ஒன்றியத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com