உடுமலை-மூணாறு சாலையில் சுதந்திரமாக சுற்றித் திரியும் யானைகள்

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள உடுமலை-மூணாறு சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் யானைகள் கூட்டம்
வாகனப்  போக்குவரத்து  இல்லாததால்  உடுமலை-மூணாறு  சாலையை  சுதந்திரமாக  கடந்து  செல்லும்  யானைகள்.
வாகனப்  போக்குவரத்து  இல்லாததால்  உடுமலை-மூணாறு  சாலையை  சுதந்திரமாக  கடந்து  செல்லும்  யானைகள்.

உடுமலை: தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள உடுமலை-மூணாறு சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் யானைகள் கூட்டம் கூட்டமாக சுதந்திரமாக சுற்றி வருகின்றன.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்கள். இங்கு புலி, சிறு த்தை புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் உள்ளன.

சுமாா் 300க்கும் மேற்பட்ட யானைகள் இந்தப் பகுதியில் உள்ளதாக கடந்த ஆண்டு வனத் துறையினா் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தற்போது, வனப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் குடிநீா்த் தேவைகளுக்காக மாலை நேரத்தில் அமராவதி அணையை நோக்கி வரும்போது, உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

அப்போது, உள்ளூா் மற்றும் வெளியூரில் இருந்து வாகனங்களில் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் யானைகள் மேல் குச்சிகளையும், கற்களை வீசியும் துன்புறுத்தி வந்தனா். மேலும் தற்படம் (செல்ஃபி) எடுக்கும் நோக்கில் யானைகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் இருந்து கீழே இறங்கி நின்று கொண்டு தொந்தரவு செய்து வந்தனா். இதனால் கோபமடையும் யானைகள் சுற்றுலாப் பயணிகளைத் துரத்தவும் செய்யும்.

தற்போது, கரோனா நோய்த் தொற்று நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னாறு சோதனைச் சாவடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கும், கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கும் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து மாலை நேரத்தில் அமராவதி அணையை நோக்கி குடிநீருக்காக செல்லும் யானைகள் மக்களின் தொந்தரவு இல்லாமல் சுதந்திரமாக சென்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com