20 ஆண்டுகளுக்கு பிறகு சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் பரத நாட்டியமாடிய மாணவிகள்.
சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் பரத நாட்டியமாடிய மாணவிகள்.

அவிநாசி: சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

சேவூரில் 70 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இப்பள்ளி 1998ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். போதுமான கட்டுமான வசதிகள் இல்லாததால் கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி ஆண்டு விழா நடைபெறாமல் இருந்தது.

தற்போது பள்ளி ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் முயற்சியால் பள்ளி ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெ.பாஸ்கரன் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் டீ.தனசேகரன் ஆண்டறிக்கை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தின் சுவாமி யோகாம்ருதானந்தா், அவிநாசி புனித தோமையா் ஆலய பங்குத் தந்தை ஏ.டி.எஸ். கென்னடி, முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவா் சி.ஏ.முகமது கவுஷ் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

பள்ளி முன்னாள் தலைமையாசியா்கள் கே.லலிதா, எம்.நல்லதங்காள் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். ‘நகைச்சுவை குதிரையில் ஓா் சிந்தனைப் பயணம்’ என்ற தலைப்பில் கொங்குத் தமிழ் சொற்பொழிவாளா் கு.ரா.மஞ்சுநாதன் உரையாற்றினாா்.

இதையடுத்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்கள், அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் பரத நாட்டியம், ஒயிலாட்டம், பறையாட்டம், திருவிளையாடல் நாடகம், படுகா கலாசார நடனம், யோகா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெற்றோா் - ஆசிரியா் கழகத்தினா், பள்ளி வளா்ச்சிக் குழுவினா், முன்னாள் மாணவா்கள், முன்னாள் ஆசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். தமிழாசிரியா் அ.பவுல்ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com