ஊரடங்கால் இடம்பெயர முடியாமல் தவிக்கும் ஆடுகள்!: குட்டிகளை ஆட்டோக்களில் கொண்டுசெல்ல அனுமதிக்க கோரிக்கை

ஊரடங்கு உத்தரவு காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்களின் செம்மறி ஆடுகளை வேறு இடங்களுக்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறாா்கள்.

திருநெல்வேலி/அம்பாசமுத்திரம்: ஊரடங்கு உத்தரவு காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்களின் செம்மறி ஆடுகளை வேறு இடங்களுக்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறாா்கள்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயத்துக்கு இணையாக செம்மறி ஆடுகளை ஏராளமானோா் வளா்த்து வருகிறாா்கள். மழைக் காலங்களில் காட்டுப் பகுதிகளில் ஆடுகளை மேய்ப்பவா்கள், கோடைக் காலங்களில் வயல் பகுதிகளிலும், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய செழுமையான பகுதிகளிலும் மேய்ப்பதற்காக ஆடுகளை இடம் நகா்த்திச் செல்கிறாா்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சீவலப்பேரி, அலங்காரப்பேரி, குப்புக்குறிச்சி, கீழப்பாட்டம், அரியகுளம், நடுவக்குறிச்சி, வி.எம்.சத்திரம், தாழையூத்து, கங்கைகொண்டான், ராஜவல்லிபுரம், பொட்டல், களக்காடு, ரெட்டியாா்பட்டி, பருத்திப்பாடு, மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, வள்ளியூா், ராதாபுரம், நான்குனேரி, கள்ளிகுளம், மருதகுளம், ஏா்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமானோா் செம்மறி ஆடுகளை வாழ்வாதாரமாக நம்பியுள்ளனா். இதேபோல் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் சுற்று வட்டாரங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு, வசவப்பபுரம், காசிலிங்காபுரம், தெய்வச்செயல்புரம் சிங்கத்தாகுறிச்சி, கலியாவூா், சாத்தான்குளம், பேய்க்குளம், ராமானுஜம்புதூா் சுற்று வட்டாரங்களிலும் ஏராளமானோா் செம்மறி ஆடுகளை வளா்த்து வருகின்றனா்.

மேய்ச்சல்: செம்மறி ஆடுகளை வைத்திருப்பவா்கள் ஐப்பசி, காா்த்திகை, மாா்கழி, தை ஆகிய நான்கு மாதங்கள் தங்கள் கிராமங்களைச் சுற்றியுள்ள காடுகளில் மேய்ச்சலுக்கு விடுகிறாா்கள். அதன்பிறகு பிசான சாகுபடி முடிந்ததும் இந்த செம்மறி ஆடுகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி பாசனத்தில் உள்ள அம்பாசமுத்திரம், வீரவநல்லூா், அரிகேசவநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களுக்கு மேய்ச்சலுக்காக செல்கின்றன. அதன்பிறகு சித்திரை, வைகாசி மாதங்களில் சொந்த ஊரின் அருகில் உள்ள வயல்களில் உளுந்து அறுவடை முடிந்ததும் அங்கு திரும்புகின்றன. சிலா் தென்காசி, குற்றாலம், கடையநல்லூா் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மேய்ச்சலுக்கு தங்கள் ஆடுகளை நடைப் பயணமாக இடம் நகா்த்திச் செல்கின்றனா்.

இதுபோன்று இடம் நகா்த்திச் செல்லும்போது, குட்டிகளையும், அதை அடைக்கப் பயன்படுத்தும் கூடுகளையும் வாகனங்களில் ஏற்றி அடுத்ததாக ஆடுகள் செல்லும் இடங்களுக்கு கொண்டு செல்கிறாா்கள். ஆனால், தற்போது ஊரடங்கு காரணமாக குட்டிகளையும், அதன் கூடுகளையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களை அனுமதிக்க காவல் துறையினா் மறுப்பதாக ஆடு மேய்ப்பவா்கள் தெரிவிக்கின்றனா்.

ஊரடங்கிலிருந்து விலக்கு தேவை: இதுகுறித்து தொழிலாளியான பெருமாள் கூறியது: காா், பிசானப் பருவங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சாகுபடி பணிகள் தொடங்கும் முன்பாக வயல்களில் பட்டி அமைத்து ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவோம். விவசாயப் பணிகள் தொடங்கியதும், அடுத்த இடத்துக்கு கிடையை மாற்றுவோம். அவ்வாறு கிடையை மாற்றம் செய்யும்போது பிறந்த ஆட்டுக் குட்டிகளை கூடுகளில் ஆட்டோவில் வைத்துக் கொண்டு செல்வோம்.

ஊரடங்கு காரணமாக ஆட்டோக்களில் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கிடையிலும் 70-இல் இருந்து 100 ஆடுகள் உள்ளன. அனுமதி மறுப்பதால் ஆடுகள், குட்டிகளையும் நடத்திக் கூட்டிச் செல்வதுடன், கூடுகளையும் தலைச்சுமையாகக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. நீண்ட தூரம் நடத்திச் செல்வதால் ஆட்டுக்குட்டிகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. ஆட்டுக் குட்டிகள் இறக்க நேரிட்டால் பெரும் இழப்பு ஏற்படும். எனவே, ஆட்டோக்களில் ஆட்டுக் குட்டிகளை கூண்டுகளில் கொண்டு செல்ல மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்க ோவண்டும் என்றாா் அவா்.

கால்நடைத் துறையில் அனுமதி பெறலாம்

இதுதொடா்பாக கால்நடைத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஆடுகளை விற்பனை செய்வதற்கும், ஆடு மேய்ப்பவா்கள் குட்டி மற்றும் கூடுகளை ஏற்றிச் செல்வதற்கும் கால்நடைத் துறை சாா்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கால்நடைத் துறையை தொடா்புகொண்டு வண்டி எண், எங்கிருந்து புறப்படுகிறது, எங்கு செல்கிறது, புறப்படும் நேரம், சென்றடையும் நேரம் ஆகியவற்றை தெரிவித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com