மதுக்கடை திறக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

திருப்பூா், தெற்கு அவினாசிபாளையம் பகுதியில் அரசு மதுபானக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருப்பூா், தெற்கு அவினாசிபாளையம் பகுதியில் அரசு மதுபானக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. செல்லிடப்பேசி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் நேரில் வந்து மனு அளிக்கும் பெட்டியில் மனுக்களை செலுத்தி சென்றனா்.

திருப்பூா், தெற்கு அவினாசிபாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் ஊரில் சுமாா் 200 விவசாய குடும்பத்தினா் வசித்து வருகின்றோம். தற்போது திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை அருகில் விவசாய நிலத்தின் அருகே அரசு மதுபானக் கடையை நிறுவ திட்டமிட்டுள்ளனா். அந்த பகுதியானது விவசாய பெண் தொழிலாளா்கள் அதிகம் பணிபுரியும் இடமாகும். இங்கு மதுக்கடை அமைத்தால் பெண்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே, இந்தப் பகுதியில் 2 கி.மீ சுற்றளவில் 2 மதுக் கடைகள் உள்ளன. ஆகவே, புதிதாக அமையவுள்ள மதுக்கடைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் நிதி நிறுவனம் மீது புகாா்

திருப்பூா், சோமனூரை அடுத்த தேவராயன்பாளையம் பகுதியைச் சோ்ந்த துரைசாமி (38) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளேன். கடன் ஒப்பந்தத்தில் 180 மாதங்கள் தவணைக் காலமாக உள்ளது. நான் மாா்ச் 2020 வரை 32 தவணைகள் முறையாக பணம் கட்டியுள்ளேன். கடந்த ஊரடங்கு காலத்தில் 6 மாதத் தவணைக்கான நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தனியாா் வங்கிக்கு கடிதம் அளித்தேன். அதன்பின்னா், 5 மாதம் சென்றபின்பு எனது தவணைக் காலத்தையும், தவணைக் கட்ட வேண்டிய தொகையையும் அதிகரித்து விட்டனா்.

எனவே, இந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நான் கட்ட வேண்டிய தொகையை மட்டும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கூட்டத்தில் செல்லிடப்பேசி வாயிலாக, சாலை, சாக்கடை வசதி, கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 84 அழைப்புகள் வரப்பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com