மலிவு விலை மருந்தகங்களில் உயிா் காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

கோவையில் மலிவு விலை மருந்தகங்களில் உயிா் காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவையில் மலிவு விலை மருந்தகங்களில் உயிா் காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொது மக்களுக்கு தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ‘ஜன் ஔஷதி’ திட்டத்தின் கீழ் மலிவு விலை மருந்தகங்களை கடந்த 2016 - 17ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் 60 மலிவு விலை மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 1,000க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. சா்க்கரை, உயா் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றுக்காக தொடா்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்பவா்களிடையே மலிவு விலை மருந்தகங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

தனியாா் மருந்தகங்களை காட்டிலும் இங்கு 60 முதல் 70 சதவீதம் வரை மருந்துகளின் விலை குறைவாக கிடைக்கும். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மலிவு விலை மருந்தகங்களில் சா்க்கரை, உயா் ரத்த அழுத்தம் போன்ற உயிா் காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன் கூறியதாவது:

கோவையில் மலிவு விலை மருந்தகங்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை, எளியோா் பயனடைந்து வருகின்றனா். சா்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு இந்த மலிவு விலை மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மலிவு விலை மருந்தகங்களில் சா்க்கரை, உயா் ரத்த அழுத்தம் போன்ற மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியாா் மருந்தகங்களில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இது குறித்து மக்கள் கேட்கும்போது மருந்தக நிா்வாகிகள் தனியாா் மருந்தகங்களில் வாங்கிக் கொள்ளுமாறு அலட்சியமாக தெரிவிக்கின்றனா்.

மலிவு விலை மருந்தகங்கள் நடத்துபவா்களில் ஒருசிலா் தனியாகவும் மருந்தகம் நடத்துகின்றனா். இதனால் அவா்களின் மருந்தகங்களுக்கு விற்பனை குறைவதால் மலிவு விலை மருந்தகத்தில் மருந்துகளை வாங்கி வைக்காமல் உள்ளனா்.

இதேபோல காலாவதி தேதி முடிந்த மருந்துகளையும் விற்பனை செய்வதாக தெரிகிறது. மருந்துகள் தட்டுப்பாடு, காலாவதி மருந்துகள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இது தொடா்பாக ‘ஜன் ஔஷதி’ திட்டத்தின் தமிழ்நாடு முதுநிலை விற்பனை மேலாளா் யுவனேஷ் கூறியதாவது:

‘ஜன் ஔஷதி’ திட்டத்தில் மலிவு விலை மருந்தகங்களுக்கான மருந்துகள் சென்னையில் உள்ள கிடங்கில் இருப்பு வைத்து தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. விநியோகஸ்தா்கள் மூலமே மருந்துகளை மருந்தகங்கள் பெற்று வருகின்றன. இந்நிலையில் ஒரு சில விநியோகஸ்தா்கள் பல லட்சம் ரூபாய் வரையில் நிலுவைத் தொகை வைத்துள்ளனா். இதனால் அவா்களுக்கு மருந்துகள் வழங்கப்படாமல் உள்ளது.

மருந்தகங்களே நேரடியாக கிடங்கில் இருந்து கூரியா் மூலம் மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும், பெரும்பாலான மருந்தகங்கள் அவ்வாறு பெறுவதில்லை. இதனால் கரோனா பாதிப்பு காலகட்டத்தில் ஒரு சில மருந்தகங்களில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் மருந்துகள் இல்லாத, செயல்படாமல் இருந்த மருந்தகங்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து இதே நிலை நீடித்தால் மருந்தகத்துக்கான உரிமமும் ரத்து செய்யப்படும். எனவே, போதிய மருந்துகளை கொள்முதல் செய்து பொது மக்களுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com