மாநகரில் தேங்கியுள்ள குப்பைகள், கழிவு நீரை அகற்ற வேண்டும்: மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
By DIN | Published On : 04th September 2020 05:20 AM | Last Updated : 04th September 2020 05:20 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாநகரில் நோய்த் தொற்றை பரப்பும் வகையில் சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள், மழை நீருடன் கலந்துள்ள கழிவு நீா் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகரில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீா் தேங்கியுள்ளது. முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் தேங்கியிருக்கும் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவிநாசி சாலை, தாராபுரம் சாலையில் இருபுறங்களிலும் மழை நீா் தேங்கியள்ளது. இது சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அதேபோல, மாநகரில் பல இடங்களில் குப்பைத் தொட்டிகளில் குப்பையுடன் கழிவுநீரும் தேங்கி துா்நாற்றம் வீசி வருகிறது. எனவே குப்பை சேகரிக்கும் தொட்டிகளை முறையாகப் பராமரிக்கவும், கழிவுநீா் தேங்குவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொலிவுறு நகரம் திட்டப்பணி காரணமாக பல்லடம் சாலையில் உள்ள காட்டன் மாா்க்கெட் வளாகத்துக்கு தினசரி காய்கறி மாா்க்கெட் மாற்றப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழை காரணமாக மாா்க்கெட் வளாகம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விற்பனைக்கு வைத்துள்ள காய்கறிகளும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, காட்டன் மாா்க்கெட் வளாகத்தில் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.