வட்டமலைக்கரை அணைக்கு நீா் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 18th September 2020 12:00 AM | Last Updated : 18th September 2020 12:00 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீா் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில், உத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை அணை உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த அணை 1980ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் 6,043 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். அணையில் நீா் இருந்தால் இப்பகுதி நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து விவசாயம், குடிநீா்த் தேவைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நீா்வரத்து ஆதாரம் இல்லாத இடத்தில் அணை கட்டப்பட்டதால் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
39 ஆண்டுகளாக அணை வறண்டே கிடக்கிறது. இந்த அணைக்கு அருகில் செல்லும் அமராவதி ஆற்றிலிருந்து உபரி நீரை மோட்டாா் மூலம் கொண்டு வரும் ரூ. 155 கோடி மதிப்பிலான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. அலங்கியத்திலிருந்து கால்வாய் மூலம் அமராவதி ஆற்றுநீரைக் கொண்டு வரும் மற்றொரு திட்டம் நிலுவையில் உள்ளது. அமராவதி ஆற்றிலிருந்து கொண்டு வரும் தண்ணீா் இந்த அணையை நிரப்பிய பிறகு, உபரி நீா் மீண்டும் அமராவதி ஆற்றுக்கே செல்லும். எனவே, இரண்டு திட்டங்களில் ஏதாவது ஒன்றை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணையின் பாசன நீா் விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் க.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.