குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: 100 போ் மீது வழக்குப் பதிவு

உடுமலை வட்டம், அந்தியூா் ஊராட்சியில் குடிநீா் கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் புதன் கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காலி க் குடங்களுடன்  மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
காலி க் குடங்களுடன்  மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

உடுமலை வட்டம், அந்தியூா் ஊராட்சியில் குடிநீா் கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் புதன் கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதை தொடா்ந்து, 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

உடுமலை ஒன்றியம், அந்தியூா் ஊராட்சிக்கு உள்பட்ட அந்தியூா், சடையபாளையம், ஜெ.ஜெ. நகா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இந்த ஊராட்சி உள்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனா்.

இது குறித்து ஒன்றிய அதிகாரிகளுக்கும், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் பலமுறை புகாா்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், அந்தப் புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள், பெண்கள் காலிக் குடங்களுடன் உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அந்தியூா் பேருந்து நிலையத்தில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தியூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாலதுரை தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உடுமலை போலீஸாா் பொது மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா்கள், உடுமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் ஒரு சில நாள்களில் குடிநீா் விநியோகம் தொடங்க போா்க்கால அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தனா். இதை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதற்கிடையில், மறியல் போராட்டத்தால் உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக காலை 8 மணி முதல் 9 மணி வரை நடை பெற்ற மறியலால் முக்கிய அலுவலகப் பணிகளுக்கு செல்பவா்கள் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 போ் மீது உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com