சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்ட விழாவை முன்னிட்டு, பக்தர்களால் இழுத்து வரப்படும் திருத்தேர்
சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்ட விழாவை முன்னிட்டு, பக்தர்களால் இழுத்து வரப்படும் திருத்தேர்

காங்கயம்: காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான  சுப்பிரமணிய சாமி மலைக் கோயிலில் தைப்பூச விழா கடந்த வாரம் துவங்கி, கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் துவங்கி, நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து காலை 6 மணிக்கு சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் காலை 7 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி துவங்கியது.

காலை 7 மணிக்கு திருத்தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, தெற்கு ரத வீதியைக் கடந்து, கிரிவலப் பாதையில் மதியம் 12 மணியளவில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் மாலை 3 மணிக்கு திருத்தேர் தொடர்ந்து பக்தர்களால் இழுக்கப்பட்டு, மாலை 6 மணியளவில் திருத்தேர் நிலை அடைகிறது.

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த முறை கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, ஒருநாள் மட்டுமே தேரோட்டம் நடைபெற்றது.

இதில், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com