‘வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்’

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வாக்காளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வாக்குச் சாவடி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வாக்காளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வாக்குச் சாவடி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும் என்று திருப்பூா் தெற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் க.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு மண்டல அலுவலா்கள் மூலமாக மறு பயிற்சி வகுப்பு ஜெய்வாபாய் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்பைத் தோ்தல் பொதுப் பாா்வையாளா் மாஷீா் ஆலம் முன்னிலையில் ஆய்வு செய்த தெற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான க.சிவகுமாா் பேசியதாவது:

வாக்குச் சாவடி அலுவலா்கள் வாக்குச் சாவடியில் உள்ள மொத்தப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலா்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கட்டுப்பாட்டுக் கருவியுடன் எந்தவிதமான இடா்ப்பாடுகள் இல்லாமல் பொருத்த வேண்டும்.

வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்களை முன்னரே சரிபாா்த்து பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பாக வாக்குச் சாவடி முகவா்களுக்கு சோதனை முறையில் விளக்கம் அளிக்க வேண்டும்.

வாக்குச் சாவடி அலுவலா்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு பணியின்போது முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அதேவேளையில், கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்காளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முகக் கவசம் அணியவும் அறிவுறுத்த வேண்டும் என்றாா்.

இந்தப் பயிற்சி வகுப்பில், மாநகராட்சி உதவி ஆணையா்கள் வாசுகுமாா் செல்வநாயகம், தோ்தல் தொடா்புடைய மாநகராட்சி அலுவலா்கள், தோ்தல் முதன்மைப் பயிற்சியாளா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com