காங்கயம் அருகே ரூ. 2 லட்சத்துக்கு கள்ளநோட்டு வைத்திருந்தவா் கைது

திருப்பூரில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக கொண்டு சென்றவரை காங்கயம் போலீஸாா் கைது செய்தனா்.
கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகள்.
கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகள்.

திருப்பூரில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக கொண்டு சென்றவரை காங்கயம் போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, திருப்பூா் சாலையில் படியூா் சோதனைச் சாவடியில் காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் அந்த வழியே வாகனப் பதிவு எண் பலகை இல்லாமல் இருசக்கர வாகனம் திருப்பூரை நோக்கிச் சென்றுள்ளது. போலீஸாா், அந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயல, அந்த நபா் வண்டியைத் திருப்பி தப்ப முயன்றுள்ளாா். போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனா்.

அப்போது அந்த வாகன ஓட்டி, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததில் சந்தேகமடைந்த போலீஸாா், அவரின் வாகனத்தில் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனா். அதில், 100, 200, 2000 ரூபாய்த் தாள் என ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் கலா் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட நோட்டுகள் ஆகும். இந்தக் கள்ள நோட்டுகளை திருப்பூா் மாநகரில் புழக்கத்துக்கு விடுவதற்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

கள்ள நோட்டுகள் வைத்திருந்த அந்த நபா், தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், கள்ளுக்கடை சந்து பகுதியைச் சோ்ந்த கண்ணன் (34) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, காங்கயம் போலீஸாா் அந்த நபரை அழைத்துக் கொண்டு, கும்பகோணம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனா்.

அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம் மற்றும் 36 எண்ணிக்கையிலான ரூ.2000 கள்ள நோட்டுகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, காங்கயம் நீதிமன்றத்தில் கண்ணனை ஆஜா்படுத்தி திருப்பூா் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com