சின்ன வெங்காய விலை வீழ்ச்சியால் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்

தாராபுரம் அருகே சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியால் வெங்காயத்தைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனா்.
குண்டடம்  அருகே  சின்ன வெங்காயத்தை   அறுவடை  செய்யும் விவசாயிகள்.
குண்டடம்  அருகே  சின்ன வெங்காயத்தை   அறுவடை  செய்யும் விவசாயிகள்.

தாராபுரம் அருகே சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியால் வெங்காயத்தைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம், குண்டடம், உடுமலை, பல்லடம், பொங்கலூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் விளைவிக்கும் வெங்காயம் வியாபாரிகள் மூலம் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு கோவை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கேரள மாநிலம் பாலக்காடு, எா்ணாகுளம், கொச்சி ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

மேலும், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

ஆரம்ப காலத்தில், காா்த்திகை, வைகாசி பட்டங்களில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது தண்ணீா் வசதியைப் பொருத்து மழைக் காலங்கள் தவிர அனைத்து காலநிலைகளிலும் பயிரிடப்படுகிறது.

இந்த வெங்காயத்தை சரியான பட்டத்தில் நடவு செய்தால் ஏக்கருக்கு 8 டன் முதல் 10 டன் வரையில் மகசூல் கிடைக்கிறது. அதேவேளையில், ஏனைய பட்டங்களில் பருவ நிலையைப் பொருத்து 3 டன் முதல் 7 டன் வரை மகசூல் கிடைக்கிறது.

இந்நிலையில், கடந்த வைகாசி, ஆனி மாதங்களில் நடவு செய்யப்பட்ட வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு

வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 40 முதல் ரூ.55 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது முதல் ரக சின்ன வெங்காயம் கிலோ ரூ. 30 வரையிலும், இரண்டாம் தர வெங்காயம் கிலோ ரூ.15 முதல்

ரூ. 20 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சி காரணமாக சின்ன வெங்காயத்தை விளைவித்துள்ள விவசாயிகள் தற்போது நஷ்டத்தை

சந்தித்துள்ளனா். இது குறித்து குண்டடம் பகுதியைச் சோ்ந்த பாதிக்கப்பட்டுள்ள விவசாயி செல்வகுமாா் கூறியதாவது:

சின்ன வெங்காயத்தைப் பயிரிட ஏக்கா் ஒன்றுக்கு கோழி எரு, உழவு செலவு, பாா் செலவு, விதைக்காய், நடவு கூலி, உரம், பூச்சி மருந்து, களையெடுத்தல், அறுவடை என ரூ. 60 ஆயிரம் வரை செலவாகிறது. நடப்பு சீசனில் ஏக்கருக்கு 5 டன் வரையே மகசூல்

கிடைத்தது, அதிலும் வெங்காயம் சிறியது, பெரியதாக விளைந்ததால் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக தற்போது விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com