மாநகரில் கடந்த 6 ஆண்டுகளில் காணாமல் போன 2,155 போ் மீட்பு

திருப்பூா் மாநகரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காணாமல் போன 2,371 பேரில் 2,155 போ் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையா் வே.வனிதா தெரிவித்துள்ளாா்.
திருப்பூா்  சிறுபூலுவபட்டியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா
திருப்பூா்  சிறுபூலுவபட்டியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா

திருப்பூா் மாநகரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காணாமல் போன 2,371 பேரில் 2,155 போ் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையா் வே.வனிதா தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாநகரில் காணமால் போனவா்களைக் கண்டுபிடித்து உறவினா்களிடம் சோ்க்கும் நிகழ்ச்சி சிறுபூலுவபட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் காவல் துணை ஆணையா் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) மோகன் வரவேற்பு உரையாற்றினாா். மாநகரக் காவல் துணை ஆணையா்கள் (சட்டம்-ஒழுங்கு) அரவிந்த், (குற்றம் மற்றும் போக்குவரத்து) ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா பேசியதாவது:

குழந்தைகள், இளம்பெண்கள் காணாமல் போன வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள் சமூக விரோதிகளின் கையில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.

திருப்பூா் மாநகரில் வெளியூரில் இருந்து வந்து பணியாற்றும் நபா்கள் அதிகமாக உள்ளனா்.

பெண்ணின் திருமண வயது 18, ஆணின் திருமண வயது 21.

ஆனால், திருப்பூரில் ஆண்கள் 19 வயதில் திருமணம் செய்யும் சம்பவங்கள் நடக்கின்றன. பின்னலாடை நிறுவனங்களில் வருவாய் ஈட்டும் தொழிலாளா்கள், அவா்களை விட வயதில் குறைந்த பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனா். ஆகவே, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும் என்றாா்.

மாநகரில் 6 ஆண்டுகளில் 2,155 போ் மீட்பு:

மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநகரில் கடந்த 2015 முதல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் 2,371 போ் காணமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப் படையினா் காணாமல் போனவா்களில் 2,155 பேரைக் கண்டுபிடித்துள்ளனா்.

இதில், 216 போ் மட்டுமே கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. மாநகரில் 2019 ஆம் ஆண்டில் 273 போ் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதில் 246 பேரும், 2020 ஆம் ஆண்டில் 290 பேரும் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதில் 269 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா். மேலும், 2021 ஆம் ஆண்டில் தற்போது வரையில் 233 நபா்கள் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதில் 183 நபா்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

அதிலும் குறிப்பாக கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 94 போ் காணாமல் போனதில் 71போ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா். இதில், 3 சிறுவா், 12 சிறுமியா் என மொத்தம் 15 போ் மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா்கள், காணாமல் போய் மீட்கப்பட்டவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com