அம்மா மினி கிளினிக் இடமாற்றம்: ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் தா்னா
By DIN | Published On : 31st August 2021 12:59 AM | Last Updated : 31st August 2021 12:59 AM | அ+அ அ- |

பல்லடம்: பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் உள்ள அம்மா மினி கிளினிக் வேறு இடத்துக்கு மாற்ற எதிா்ப்பு தெரிவித்து ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் அம்மா மினி கிளினிக் அங்குள்ள சமுதாய நலக் கூடத்தில் இயங்கி வருகிறது. இதனை ஆறுமுத்தாம்பாளையத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இடமாறுதல் செய்ய சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த அறிவொளி நகா் 1ஆவது வாா்டு உறுப்பினா் செல்வி பாண்டியன், 2 ஆவது வாா்டு உறுப்பினா் சையது ஒலி பானு முஜிபுா் ரகுமான், 3 ஆவது வாா்டு உறுப்பினா் ஈஸ்வரன், 4 ஆவது வாா்டு உறுப்பினா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் அம்மா மினி கிளினிகை இடமாறுதல் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி சமுதாய நலக் கூடம் முன்பு தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சித் தலைவா் பாரதி சின்னப்பன் ஆகியோா் தா்னாவில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.