தாட்கோ கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்: தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை

பட்டியல் இனத்தவர்கள் பெற்ற தாட்கோ கடனைத் தள்ளுபடி செய்வதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கயம்: பட்டியல் இனத்தவர்கள் பெற்ற தாட்கோ கடனைத் தள்ளுபடி செய்வதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் ச.கருப்பையா, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் கடன் ரூ.16,000 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதில், ஒருசில நிலம் வைத்திருப்பவர்கள் குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெற்றவர்கள் மட்டும் பயனடைந்துள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டில் சொந்தமாய் நிலமில்லாத விவசாயக் கூலிகளும், அமைப்புசாரா தொழிலாளர்களும் அதிகமாக உள்ளனர். விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், அன்றாடக் கூலித் தொழிலாளர்களுக்கும் விவசாயக் கடன் தள்ளுபடியால் எந்தவித பயனும் இல்லை.

தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தாட்கோ கடன் வழங்கும் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு காணும் திட்டமாக செயல்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் கறவை மாடு, ஆடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு எனத் தொடங்கி, இன்று வாகனக் கடன் வரை வழங்கப்பட்டாலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு முறையாக வங்கிக் கடன் வழங்கப்படுவதில்லை.

எனவே, தாங்கள் நேரடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, தாட்கோ திட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார மேம்பாடு காணும் வகையில், நடப்பு நிதியாண்டில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கடந்த 20 ஆண்டுகளாக தாட்கோ திட்டத்தின் மூலம் பெறப்பட்ட அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com